இதுவரை இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்தவர் யார் யார்? முழு பட்டியல் இதோ..

தேசிய மற்றும் தமிழக அளவில் இலாகா இல்லாமல் அமைச்சரவையில் நீடித்த அமைச்சர்களின் பட்டியலை பார்க்கலாம்.

Who were the Ministers without portfolios at national and Tamil Nadu level? Here is the full list..

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கவனித்து வந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இலாகா மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர், குற்றவியல் வழக்கு இருப்பதால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர முடியாது என்று கூறி தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன?

அரசாங்கத்தில் எந்த ஒரு இலாகாவுக்கு பொறுப்பு வகிக்கவில்லை என்றாலும், அமைச்சர் பதவிக்கான ஊதியம் மற்றும் அமைச்சரவை முடிவுகளில் வாக்களிக்கும் உரிமையை பெறுவது இலாகா இல்லாத அமைச்சர் பதவி என்று அழைக்கப்படுகிறது. இந்த இலாகா இல்லாத அமைச்சர் பதவி இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையிலேயே இலாகா இல்லாத அமைச்சர் பதவி இருந்தது. அந்த வகையில் தேசிய மற்றும் தமிழக அளவில் இலாகா இல்லாமல் அமைச்சரவையில் நீடித்த அமைச்சர்களின் பட்டியலை பார்க்கலாம்.

மத்தியில் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்தவர்கள்

1947-ல் நாடு சுதந்திரமடைந்து அமைக்கப்பட்ட பிரதமர் நேரு தலைமையிலான முதல் அமைச்சரவையில், ராஜகோபாலச்சார், என்.கோபாலசாமி அய்யங்கார், வி.கே. கிருஷ்ணன் மேனன் ஆகியோர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்தனர்.

1952-ம் ஆண்டில் நேரு 2-வது முறை பிரதமராக பொறுப்பேற்ற போதும், அவரின் அமைச்சரவையில் டிடி கிருஷ்ணமாச்சாரி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்தனர்.

2003-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தனக்கு வழங்கப்பட்ட நிலக்கரி துறையை ஏற்காத மம்தா பானர்ஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தார். அதே அமைச்சரவை இடம்பெற்றிருந்த முரசொலி மாறன், உடல்நிலை பாதிப்பால் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.

2004-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், தற்போது தெலங்கானா முதலமைச்சராக உள்ள சந்திரசேகர ராவ் மற்றும் நட்வர் சிங் ஆகியோர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்தனர்.

2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அருண் ஜேட்லி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தார்.

தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சர்கள்

1984-85-ல் தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது அவர் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கவனித்து வந்த துறைகள் அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு வழங்கப்பட்டது.

2011-ம் ஆண்டு அமைச்சர் கருப்பசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது, அவரது துறை மற்றொரு அமைச்சருக்கு வழங்கப்பட்டது. இதனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார்.

2015-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் 2015-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் வகித்து வந்த இந்து சமய அறநிலையத்துறை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது துறைகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் அறிவித்தார்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios