இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 6வது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 2,54,242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,117 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியா முழுவதும் 1.24 லட்சம் பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது புதிதாக தினமும் 7 ஆயிரம், 8 ஆயிரம் என தொற்று ஏற்பட்டுவருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிவேகமாகப் பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத் தலைவர் டாக்டர் மைக்கேல் ரையான் கூறுகையில், “தெற்காசியாவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை மிகவும் அடர்த்தி அதிகம். இந்த நாடுகளில் மக்கள் அடர்த்தி இருந்தாலும், வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவவில்லை. ஆனால், அதற்கான ஆபத்து இந்த நாடுகளில் இருந்துகொண்டுதான் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சமூகங்களில் கலந்துவிட்டால், அது எந்த நேரத்திலும் வேகம் எடுக்கலாம். இதை நாங்கள் தொடர்ந்து கண்டுவருகிறோம்.


இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் வைரஸ் பரவலை நிச்சயமாக குறைத்து தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், இந்தியாவில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்துள்ளன. இந்த நிலையில் ஆபத்து எப்போதும் உள்ளது. இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை, மக்கள் தொகை அடர்த்தி போன்ற பெரிய பிரச்னைகள் உள்ளன. இந்தியாவில் பல்வேறு தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு போவதை தவிர வேறு வழி இல்லை என்பதையும் புரிந்துவைத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.