கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 22 தொகுதிகளை கைப்பற்றினால் தேவகவுடா பிரதமர் ஆவார் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்ட நிலையில், அது பெரிய அளவில் கைகூடவில்லை. என்றாலு காங்கிரஸ் தலைமையில் ஐமுகூ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எந்தக் கூட்டணிக்கும் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைக்கு எண்ணம் ஒவ்வொரு தலைவர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பு 10 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த 80 வயதைத் தாண்டிய தேவகவுடாவுக்கும் பிரதமராகும் ஆசை முளைத்திருக்கிறது.

அதை அவரது மகனும் காங்கிரஸ் உதவியுடன் கர்நாடகாவில் ஆட்சி நடத்திவரும் குமாரசாமி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மாண்டியா மாவட்டத்தில் அரசு நலத் திட்ட தொடக்க விழாவில் குமாரசாமி பங்கேற்றார். அந்த விழாவில் குமாரசாமி பேசியது ஹைலைட்டானது.“கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் சூழ்நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. ம.ஜ.தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதமர் நாற்காலியில் அமரலாம். 1996-ஆம் ஆண்டில் இருந்த அரசியல் சூழ்நிலை போலவே தற்போதும் ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார். 

1996-ம் ஆண்டில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது மாநில கட்சிகள் மற்றும் பிற தேசிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினார்கள். அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வெளியே இருந்த ஆதரவு அளித்தது. அந்தக் கூட்டணி சார்பில் தேவகவுடா 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரை பிரதமராக இருந்தார். தற்போது அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால், பிரதமர் பதவியைப் பிடிக்க தேவகவுடா காய் நகர்த்திவருகிறார் என்று தகவல்கள் வெளியாகிவருகிறன. அதைப் பிரதிபலிக்கும்விதமாக அவரது மகன் குமாரசாமியும் கருத்து தெரிவித்துள்ளார்.