யார் இந்த கவுரவ் கோகாய்? அசாமில் பாஜக ஆட்சிக்கு அச்சுறுத்தலாக மாறியது எப்படி?
கவுரவ் கோகாய் அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாயின் மகன் ஆவார். 2014 முதல் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் இவர் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வாகியுள்ள கவுரவ் கோகாய் பாஜக அரசுக்கு எதிரான வலுவான குரல் எழுப்பும் உறுப்பினர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். குறிப்பாக, மணிப்பூர் விவகாரத்தில் நரேந்திர மோடியையும் பாஜக அரசையும் விமர்சித்துப் பேசியபோது நாடு முழுவதும் கவனம் பெற்றார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள கவுரவ் கோகாய், அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாயின் மகன் ஆவார். 2020 முதல் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
வேலையைத் துறந்த சமூக சேவகர்!
கவுரவ் கோகாய் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி பிறந்தார். 41 வயதான இளம் அரசியல்வாதியான இவர் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் 2005ஆம் ஆண்டு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, டெல்லியைச் சேர்ந்த பிரவா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார்.
இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது! பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்களுக்கு நவீன் பட்நாயக் உத்தரவு!
கவுரவ் கோகாயின் தந்தை தருண் கோகோய் 2001 முதல் 2016 வரை அசாமின் முதலமைச்சராக பதவி வகித்தார். அந்த மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவரும் அவர்தான். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த கவுரவ் டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பட்டம் பெற்றார் . பின்னர் 2004ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக். பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்கா சென்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
நடனக்கலையிலும் நாட்டம் கொண்டவர். 2013இல், இங்கிலாந்தில் பிறந்த எலிசபெத் கோல்போர்ன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கவுரவ் கோகாய் குடும்பத்தினர் அரசியலில் மட்டுமின்றி திரைத்துறையிலும் இலக்கியத்திலும் பிரபலமானவர்கள். இவரது மாமா கணேஷ் கோகோய் கவிஞர். மற்றொரு மாமா பரண் பார்பரூவா திரைப்பட தயாரிப்பாளர். இவரது உறவினரான பிரேரனா பார்பரூவா திரைப்பட இயக்குனர். இவரது மாமா டிப் கோகோய் அசாமின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்.
அரசியல் களத்தில் அதிரடி:
2014இல், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் கலியாபோரின் மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். முதல் தேர்தலிலேயே மொத்தம் 443,315 வாக்குகளைப் பெற்று, பாஜகவின் மிருணாள் குமார் சைகியாவை 93,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி மணிப்பூர் விவாகரத்தை முன்வைத்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை வழிநடத்தியவர் கவுரவ் கோகாய் தான். அப்போது அவரது பேச்சில் அனல் பறந்தது. “மோடி ஏன் இன்றுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை? மணிப்பூரைப் பற்றி பேசுவதற்கு 80 நாட்கள் ஆனது ஏன்? கடைசியாகப் பேசியபோதும் வெறும் 30 வினாடிகள் மட்டும் பேசியது ஏன்? ஏன் இதுவரை மணிப்பூர் முதல்வரை பதவியில் இருந்து நீக்கவில்லை?" என்று கவுரவ் கோகாய் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் கோகாய் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் முக்கியமானவராக கவுரவ் கோகாய் அறியப்படுகிறார். தனிப்பெரும்பான்மை இல்லாததால் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. இதனால், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கையும் வலு அடைந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் கவுரவ் கோகாயின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் கவுரவ் கோகாய் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பாத்திரமாக இருப்பார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவி இப்போது முதல்வராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சித்துப் பேசிவருகிறார். இதனால், அடுத்த அசாம் சட்டமன்றத் தேர்தலில் கவுரவ் கோகாய் முதலைமச்சர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.