வங்கி ஊழல் புகாரில் சிக்கி கைதாகியுள்ள கோச்சார் தம்பதியின் மகன் அர்ஜுன் கோச்சார். இவர் யார்? இவருடைய பின்புலம் என்ன என்பதை விவரிக்கிறது இத்தொகுப்பு.
ஐசிஐசிஐ வங்கியின் முன்ளாள் தலைவர் சாந்தா கோச்சாரும் அவரது கணவர் தீபக் கோச்சாரும் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்குப் பிறந்த மகன்தான் அர்ஜுன் கோச்சார்.
கோச்சார் தம்பதி கைதாவதற்கு முன் தங்கள் மகனுக்கு திருமணத் தேதியைக் குறித்து, மும்பையில் பிரபல ஹோட்டலுக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோச்சார் தம்பதி மகன் அர்ஜுன் கோச்சார் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள கதீட்ரல் அண்ட் ஜான் கேனான் பள்ளியில் முடித்துள்ளார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.
2016ல் மும்பையில் உள்ள தனியால் வங்கி ஒன்றில் பயணியாற்றியுள்ளார். 2017ல் மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறார். ஏல் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஸ்குவாஷ் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறார். நமீபியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கெடுத்துள்ளார்.

அர்ஜுன் கோச்சார் திருமண அழைப்பிதழ் ஒன்று வாட்ஸப்பில் கசிந்துள்ளது. அதில், அர்ஜுனுக்கு சஞ்சனா என்ற பெண்ணுடன் ஜனவரி 7ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அர்ஜுன் கோச்சாரின் சகோதரி ஆர்த்திக்கு கடந்த 2014ஆம் ஆண்டு கல்லூரியில் தன்னுடன் படித்த ஆதித்யாவுடன் மும்பை தாஜ் ஹோட்டலில் வைத்து ஆடம்பரங்களுடன் திருமணம் நடந்து முடிந்தது. ஆர்த்தியும் அமெரிக்காவில் பென்சில்வேனியாவிலும் ஹார்வர்டிலும் படித்து பட்டங்கள் பெற்றவர்.
