அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அதிக நன்கொடை கொடுத்தவர்கள் இவர்கள்தான்; அதானி, அம்பானி இல்லை!!
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக பிரதமர் மோடி தலைமையில் நடந்து முடிந்தது.
அயோத்தியில் பால ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் பிரதமர் மோடி முன்னிலையில் நடந்து முடிந்தது. நேற்று பிரபலங்கள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் அனுஷ்டித்து இந்த பூஜையில் கலந்து கொண்டு இருந்தார். நேற்றைய திறப்பு விழா முடிந்து விரத்தத்தை பிரதமர் முடித்துக் கொண்டு இருந்தார்.
அயோத்தியில் இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ராமர் கோவிலை பிரம்மாண்ட முறையில் கட்டுவதற்கு பலரும் நன்கொடை கொடுத்துள்ளனர்.
யார் இந்த திலிப் குமார் வி லக்கி?
அந்த வகையில் சூரத்தைச் சேர்ந்த திலிப் குமார் வி லக்கி என்பவர் அதிக நன்கொடை கொடுத்துள்ளார். இவர் சூரத்தில் வைர வியாபாரியாக இருந்து வருகிறார். இவர் மட்டும் ரூ. 68 கோடி மதிப்பிலான 101 கிலோ தங்கத்தை கோவிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இந்த தங்கத்தைக் கொண்டு கோவிலின் கதவுகள், கருவறை, திரிசூல், பில்லர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவர் கொடுத்த தங்கத்தில் கோயிலின் கருவறை மற்றும் தரை தளத்தில் 14 தங்க கதவுகள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முராரி பாபு யார்?
இவரைத் தவிர நாடு முழுவதும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ராமாயணம் கதை படித்து வரும் முராரி பாபு என்பவர் இந்தியாவில் இருந்து 11.3 கோடி வசூலித்து கொடுத்துள்ளார். மேலும், அமெரிக்கா, கனடாவில் இருந்து தலா 4.10 கோடியும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 3.21 கோடியும் வசூலித்துள்ளார். மொத்தமாக 18.6 கோடி நன்கொடை கொடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். மீதத் தொகை வரும் பிப்ரவரி மாதம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் வைர வியாபாரி:
இவர் தவிர குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி கோவிந்த்பாய் தோலாக்கியா 11 கோடி வழங்கியுள்ளார். உலகளவில் இருந்து பார்க்கும்போது பாட்னாவைச் சேர்ந்த மகா மந்திர் மொத்தம் 10 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
முகேஷ் அம்பானி:
இதற்கிடையே முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி இருவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு 3 தங்க கிரீடங்களும், 33 கிலோ தங்கமும் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதுபோன்று ரிலையன்ஸ் குரூப் எதுவும் கொடுக்கவில்லை என்று ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் கொடுத்து இருக்கும் தகவலில் தெரிய வந்துள்ளது. ஆனால், நேற்று மதியம் அம்பானி குடும்பத்தினர் அன்னதானம் வழங்கியதாக செய்தி வெளியாகி இருந்தது.
அதேசமயம் சில செய்திகளில் முகேஷ் அம்பானி ராமர் கோவிலுக்கு 2.51 கோடி நன்கொடையாக வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தினருடன் ராமர் கோவில் திறப்பு விழாவில கலந்து கொண்டு இருந்தார்.
மொத்தமாக ராமர் கோவிலுக்கு என்று 3,500 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. கோவில் கட்டுவதற்கு மொத்தமாக 1,800 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.