58 வயதுக்கு மேல் ஆன திருநங்கைகள் அனைத்து வகையான ரெயில் பயணத்தின் போது, மூத்த குடிமக்களுக்கான அதிலும் பெண்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை இனி பெறுவார்கள். இதற்கான இறுதி உத்தரவை விரைவில் ரெயில்வேதுறை வெளியிட உள்ளது.
திருநங்கைகளையும் மதித்து அவர்களுக்கு ரெயில் பயணத்தில் உரிய சலுகைகளையும் வழங்க வேண்டும், அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கேரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்செய்யப்பட்டு இருந்தது
.
அந்த மனு மீது சமீபத்தில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ரெயில்வேயின் முன்பதிவு படிவத்தில் ஆண், பெண் தவிர்த்து மூன்றாம் பாலினம் என்ற ஒரு கட்டத்தை சேர்க்க வேண்டும், அவர்களுக்கு படுக்கை வசதி, இருக்கை வசதி, உள்ளிட்டவற்றில் கிடைக்கும் அனைத்து வகை சலுகைகளையும் அளிக்க வேண்டும்.மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை அவர்களுக்கும் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்த ரெயில்வே துறை தீவிரமாக செயல்பட்டு, அதை அமல்படுத்தும் கட்டத்தை நெருங்கி உள்ளது.
இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ திருநங்கைகள் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தங்களுக்கு உகந்த ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினம் என்ற கட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதே வசதி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில், 58 வயதுக்கு மேல் ஆன திருநங்கைகளும் மூத்த குடிமக்கள் அதிலும் பெண்களுக்கான டிக்கெட் கட்டணச் சலுகையாக 50 சதவீதம் பெறலாம்''எனத் தெரிவித்தார்.
ரெயில்பயணத்தில் மூத்த குடிமக்கள் அதிலும் 60 வயதுக்கு மேல் ஆன ஆண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 40 சதவீதம் சலுகையும், 58 வயதுக்கு மேல் ஆண பெண்களுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளை பெண்களுக்கான 50 சதவீத கட்டணச்சலுகையில் ரெயில்வேதுறை கொண்டு வர இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
