அயோத்தி ராமர் கோயில் திறப்பு எப்போது? ஏசியாநெட்டுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எப்போது நடைபெறும் என ஏசியாநெட்டுக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது
உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கோயில் கட்டுமான பணிகளில், ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு நடைபெறும் கோயிலின் கட்டுமானப் பணிகள் வருகிற 2024ஆம் ஆண்டுதான் முழுமையாக நிறைவடையும்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்படுகிறது. எனவே, கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எப்போது நடைபெறும் என ஏசியாநெட்டுக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.
ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின், அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக இருப்பவர் நிருபேந்திர மிஸ்ரா. இவர், ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் செயல் தலைவர் ராஜேஷ் கல்ராவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கோயில் திறப்பு விழா நடைமுறைகள் ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடங்கும். பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் கொடுக்கும் தேதியின் அடிப்படையில், ஜனவரி 14 முதல் 24ஆம் தேதிக்குள் எந்த தேதியில் வேண்டுமானாலும் கோயில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ராமர் கோயிலில் ஜனவரி 14, 2024 அன்று பிரார்த்தனை மற்றும் சிலை நிறுவும் விழா தொடங்கும். பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுக்கும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் ஜனவரி 24க்கு இடைப்பட்ட எந்த நாளிலும், அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட கோயிலில் ராமர் சிலையின் இறுதி பிராண-பிரதிஷ்டா (கும்பாபிஷேகம்) நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அனுமதி கொடுக்கும் தேதியில், கோயில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். மறுநாள் முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பகுதிக்குச் சென்றது. அன்றிலிருந்து இப்போது வரை கட்டுமான பணிகளில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, பிரமாண்டமான ராமர் கோயில் முழு வடிவம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிற்கு பிரத்யேக அனுமதி வழங்கிய நிருபேந்திர மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகளின் முன்னேற்றத்தை மீண்டும் நமக்கு காண்பித்தார், மேலும் 2024 ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இண்டியா கூட்டணி பலம்: பதற்றத்தில் பாஜக - மல்லிகார்ஜுன கார்கே!
டெல்லியில் உள்ள பிரதமரின் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளையும் மேற்பார்வையிடும் மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடி தனக்கு பொறுப்பளித்த முதல் நாளிலிருந்து ஒவ்வொரு வாரமும் அயோத்திக்கு பயணம் செய்து ராமர் கட்டுமான கோயில் பணிகளில் நடைபெறும் முன்னேற்றத்தை பார்வையிட்டு வருகிறார். கட்டுமானப் பணிகளில் இருக்கும் சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தும் அவர், ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.