இண்டியா கூட்டணி பலம்: பதற்றத்தில் பாஜக - மல்லிகார்ஜுன கார்கே!

எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பலம் பாஜகவை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்

Strength of opposition alliance making govt nervous says Congress chief Mallikarjun Kharge smp

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்றும், இன்றும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இண்டியா கூட்டணியில் ஏற்கனவே 26 அரசியல் கட்சிகள் இருந்த நிலையில், சமீபத்தில் இரண்டு புதிய பிராந்திய அமைப்புகள் அக்கூட்டணியில் இணைந்தன. எனவே, மொத்தம் 28 கட்சிகள் மும்பை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில், கூட்டணியின் புதிய லோகோ வெளியிடப்படவுள்ளது. மேலும், ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை  நியமிப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகவுள்ளது. நேற்றைய முறைசாரா கூட்டம் முடிவடைந்த நிலையில், இண்டியா கூட்டணியின் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசி தங்களது கருத்துக்களை முன்வைத்து  வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பலம் பாஜகவை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். இண்டியா கூட்டணி தலைவர்கள் பழிவாங்கும் அரசியலுக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள் ஏவப்படலாம் எனவும் கார்கே எச்சரிக்கை விடுத்தார்.

இண்டியா கூட்டணியின் அஜெண்டா என்ன? ஒருங்கிணைப்பாளராகும் மல்லிகார்ஜுன கார்கே?

“கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பரப்பியதாகக் கூறப்படும் வகுப்புவாத விஷம் இப்போது அப்பாவி ரயில் பயணிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான வெறுக்கத்தக்க குற்றங்களில் காணப்படுகிறது.” என்றும் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். ரயிலில் சக பயணிகளை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் மாணவரை சக மாணவர்களை விட்டு அடிக்க சொன்ன ஆசிரியை குறிப்பிட்டு பாஜகவை கார்கே இவ்வாறு சாடினார்.

இண்டியா கூட்டணியின் கடந்த இரண்டு கூட்டங்களின் வெற்றியை பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து மதிப்பிடலாம். அவரது அடுத்தடுத்த பேச்சுகளில், இண்டியா கூட்டணியை மட்டும் அவர் தாக்கி பேசவில்லை. இண்டியா கூட்டணியை நமது நாட்டுடன் தொடர்புபடுத்தி பயங்கரவாத அமைப்பு எனவும், அடிமைத்தனத்தின் சின்னம் எனவும் விமர்சிக்கிறார் என்று கார்கே கூறினார்.

“இந்த அரசாங்கத்தின் பழிவாங்கும் அரசியலால் வரும் மாதங்களில் தாக்குதல்கள், ரெய்டுகள் மற்றும் கைதுகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமது கூட்டணி எந்த அளவிற்கு வெற்றிபெறுகிறதோ அந்த அளவுக்கு பாஜக அரசு நமது தலைவர்களுக்கு எதிராக ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தும்.” என்றும் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios