இண்டியா கூட்டணியின் அஜெண்டா என்ன? ஒருங்கிணைப்பாளராகும் மல்லிகார்ஜுன கார்கே?
இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்று முடிந்துள்ளது. பெங்களூரு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயரிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மும்பையில் இண்டியா கூட்டணியில் இரண்டு நாட்கள் கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இண்டியா கூட்டணியில் ஏற்கனவே 26 அரசியல் கட்சிகள் இருந்த நிலையில், சமீபத்தில் இரண்டு புதிய பிராந்திய அமைப்புகள் அக்கூட்டணியில் இணைந்தன. எனவே, மொத்தம் 28 கட்சிகள் மும்பை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலான கிராண்ட் ஹயாட்டில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மொத்தம் 28 கட்சிகளை சேர்ந்த 63 பிரதிநிதிகள் மும்பை சென்றுள்ளனர். இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில், கூட்டணியின் புதிய லோகோ வெளியிடப்படவுள்ளது. மேலும், ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது, செய்தித்தொடர்பாளர் உள்ளிட்டவைகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகவுள்ளது.
இண்டியா கூட்டணியின் முறைசாரா கூட்டமும், இரவு விருந்தும் நேற்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக இன்று காலை கூட்டம் தொடங்கியது. கூட்டணித் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, சந்திரயான்3 வெற்றிக்காக இஸ்ரோவை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிவடைந்த பின்னர், இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.
இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என அக்கட்சி கடுமையாக கோரியுள்ளது. இதனை மற்ற கட்சிகள் கொள்கையளவில் ஒப்புக்கொண்டன எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மாநிலக் கட்சித் தலைவர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
One Nation One Election: ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு; விரைவில் வருகிறது சட்டம்!!
இதுதவிர, பகுதி வாரியாக மற்றும் மாநில வாரியாக ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், சுமூகமாக செல்லும் பொருட்டு, கட்சிகளின் நலன்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வியூகம் அமைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹயாட் ஹோட்டலில் நேறு நடைபெற்ற இரவு உணவுக் கூட்டத்தின் போது, கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட் விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, பெங்களூரு சந்திப்பில் விவாதிக்கப்பட்ட திட்டத்தை தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் இண்டியா கூட்டணி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை கூட்டத்தில் என்ன திட்டங்கள்?
** இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு
** அனைத்து முக்கிய பிராந்தியக் கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு
** குறைந்தபட்ச செயல்திட்டங்களுக்கான வரைவுக் குழு போன்ற துணைக் குழுக்கள் அமைப்பு. கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் நபர்களைக் கொண்டு இவை அமைக்கப்பட வேண்டும்
** சிறு கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது
** தேர்தல் வியூகம், ஆதார நிதி, ஊடக மேலாண்மை போன்ற பிற குழுக்கள் அமைப்பு
மேலும், கர்நாடகா மற்றும் டெல்லி தேர்தல்களில் வெற்றியடைந்த நலத்திட்டங்கள், பணவீக்கத்தை சமாளித்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல், பல மாநிலங்களில் வறட்சி நிலவுவதால் விவசாயக் கடன் தள்ளுபடி, ஏழை பெண்களுக்கு நிதி உதவி, ஒடுக்கப்பட்ட, பழங்குடியினருக்கு சிறப்பு நலன் உள்ளிட்ட வாக்குறுதிகளும் வழங்கப்படலாம் என தெரிகிறது.