இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை போட்டுக்கொண்டார். இந்தியாவின் பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவோக்சின் தடுப்பு மருத்தை பிரதமருக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதாவும், கேரளாவைச் சேர்ந்த செவிலியரான ரோசாமா அனில் என்பவரும் செலுத்தினர். 

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று மேலும் கேட்டுக் கொண்டார். கொரோனா இல்லாத உலகை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி மகத்தானது என்று மோடி புகழாரம் சூட்டினார். 

பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தியது குறித்து புதுச்சேரி செவிலியர் நிவேதா, “பிரதமர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகிறார் என்பது எங்களுக்கு காலையில் தான் தெரியும். பிரதமருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பு மருத்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் 28 நாட்களுக்குப் பிறகு செலுத்தப்படும்.  தடுப்பூசி போட்டு முடித்தவுடன் அதை அவரிடன் சொன்னேன். தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லை என நகைச்சுவையாக கூறினார்” என தெரிவித்துள்ளார்.