என்னது.. ஒரு ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை ரூ.90 லட்சமா..? வேட்பு மனுவில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை ரூ.90 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்..
கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது.. ஆம்.. கர்நாடக தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை ரூ.90 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்புமனுவுடன் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், 2015ஆம் ஆண்டு வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை ரூ.90,03,730 என்று குறிப்பிட்டுள்ளார்..
புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரையிலான ஆரம்ப விலையில் கிடைக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் 90 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் வேட்பாளர் கடலுரு உதய் தவறுதலாக தனது வேட்பு மனுவில், ரூ.90 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.. கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை இன்று காலை தொடங்கிய நிலையில், தனது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்..
இதனிடையே கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆவணங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் என்றும், வேட்புமனுவை வாபஸ் பெற ஏப்ரல் 24-ம் தேதி கடைசி நாளாகும். 3,327 ஆண்கள், 304 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 4,710 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்..
இதையும் படிங்க : சிம்லாவில் நடைபெற உள்ள மலை பைக்கிங் போட்டி.. 88 ரைடர்கள் பங்கேற்பு