மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வெவ்வேறு சித்தாங்களை கொண்ட கட்சிகள் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளதால் விரைவில் கவிழ்ந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து ஆட்சி செய்து வருகிறது.

மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் 100 நாட்கள் ஆட்சியை கொண்டாடும் விதமாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் இறைவழிபாடு செய்தார். முன்னதாக அயோத்தியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உத்தவ் தாக்கரே கூறியதாவது: நான் பா.ஜ.க.விடமிருந்து பிரிந்து இருக்கலாம் ஆனால் இந்துத்வாவை ஒருபோதும் விட்டுவிடவில்லை. பா.ஜ.க. இந்துத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவை இரண்டு வேறுப்பட்டவை.

ராமர் கோயில் கட்டுமானத்துக்காக ரூ.1 கோடி நன்கொடை  மகாராஷ்டிரா அரசிடமிருந்து அல்ல, என்னுடைய சொந்த அறக்கட்டளையிலிருந்து அளிக்க விரும்புகிறேன். ராம் லாலாவின் ஆசிர்வாதம் பெறுவதற்காக நான் இங்கு இருக்கிறேன். பக்வா குடும்பத்தை சேர்ந்த பல உறுப்பினர்கள் இன்று (நேற்று)  என்னுடன் உள்ளனர். கடந்த 1.5 ஆண்டுகளில் நான் அயோத்தி வருவது இது 3வது முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.