Asianet News TamilAsianet News Tamil

" எங்கள் வாழ்நாளில் இவ்வளவு உடல்களை பார்த்ததில்லை": ஒடிசா தீயணைப்பு அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்..

கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தின் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ஒடிசா தீயணைப்பு துறையின் உயர் அதிகாரி பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

We have never seen so many dead bodies in our life : Odisha Fire Officer's Shocking Information..
Author
First Published Jun 3, 2023, 6:51 PM IST

பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் மூன்று தனித்தனி தடங்களில் விபத்துக்குள்ளானது. இரண்டு ரயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டு பலத்த சேதமடைந்தன. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ஒடிசா தீயணைப்பு துறையின் உயர் அதிகாரி பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். ஒடிசா தீயணைப்பு சேவையின் பொது இயக்குனர், சுதன்ஷு சாரங்கி இதுகுறித்து பேசிய போது விபத்து நடந்த இடத்திற்கு ஒரு கிரேன் வந்து, பெட்டிகளை இழுக்க உதவியதாக கூறினார். இருப்பினும், ரயில் பெட்டிகளின் கீழ் பயணிகள் சிக்கி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஒப்புக்கொண்டார். மேலும் பேசிய அவர் “ ஒரு கிரேன் வந்துவிட்டது, நாங்கள் ரயில் பெட்டியாக மேலே இழுத்தோம். ஆனால் அவற்றின் கீழ் பயணிகள் சிக்கி இருக்கக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மனமுடைந்துவிட்டோம், எங்கள் வாழ்நாளில் இவ்வளவு உடல்களை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா ரயில் விபத்து பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகாவில் மூன்று ரயில் விபத்து நடந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆய்வு செய்தார். அவருடன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடன் சென்றனர்.

ஒடிசாவின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் பிரமிளா மல்லிக் மற்றும் உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடினார். ரயில் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வர விபத்து நடந்த இடத்தில் தொடங்கப்பட்ட சீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மோடி அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “இது ஒரு வேதனையான சம்பவம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இது ஒரு தீவிரமான சம்பவம், ஒவ்வொரு கோணத்திலும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios