நிலவில் கடந்த ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தடம் பதித்திருக்க வேண்டியது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நிலவின் பரப்பில் தடம் பதித்த நான்காவது நாடாக மாறியுள்ள இந்தியா, தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
சந்திரயான்-2-இன் தொடர்ச்சியாகவே சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. சந்திரயான்-2 பயணத்தின் போது, விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மோதியது. ஆனால், சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் இன்னும் நிலவை சுற்றி வருகிறது. எனவே, இந்த முறை லேண்டரும், ரோவரும் மட்டுமே அனுப்பப்பட்டன.
சந்திரயான்2 திட்டத்தின்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த சிவன். இந்த நிலையில், சந்திரயான்3 வெற்றி குறித்து பேசிய சிவன், நிலவில் கடந்த ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தடம் பதித்திருக்க வேண்டியது என்றார்.
சந்திரயான் 3 : விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் கால்பதித்த ரோவர்.. இஸ்ரோ சொன்ன முக்கிய தகவல்..
இதுகுறித்து சிவன் கூறுகையில், “சந்திரயான்-2இல் ஏற்பட்ட சிறிய பிழையால் எங்களால் வெற்றி அடைய முடியவில்லை. இல்லையேல், நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இவற்றையெல்லாம் சாதித்திருக்க முடியும். இப்போது, பிழையில் இருந்து கற்றுக்கொண்டு அதைத் திருத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சந்திரயான்-3 ஐ கட்டமைத்தோம். 2019ஆம் ஆண்டிலேயே நாங்கள் கட்டமைத்தோம். அதில் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என்பதும் 2019ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறுவடையை நேற்று நாம் பார்த்தோம்.” என்றார்.
முன்னதாக, சந்திரயான்-3 வெற்றியையடுத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பெரிதும் நினைவுகூரப்பட்டார். சந்திரயான்-2 ஐ தரையிறக்க முடியாமல் போனதால், மிகவும் வருத்தத்துக்குள்ளான சிவன், பிரதமர் மோடியை சந்தித்தபோது, கண் கலங்கி அழுதது நினைவிருக்கலாம்.
