பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை, குரான், பைபிள் சேர்த்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 2022- 2023 ஆம் கல்வியாண்டு முதல் பகவத் கீதை சேர்க்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தை போல் கர்நாடக மாநிலத்திலும் பள்ளி பாடத்திட்டங்களில் இந்து மத நூல்களான பகவத் கீதை , ராமாயணம், மகாபாரதம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுப்பு.. பாடத்திட்டத்தில் இனி பகவத் கீதை.. கர்நாடகத்தில் வெடிக்கும் சர்ச்சைகள்..
மேலும் பகவத் கீதை என்பது இந்துக்களுக்கானது மட்டுமல்ல. அது அனைவருக்குமானது. எனவே அடுத்த கல்வியாண்டு முதல் பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் , ராமாயணம் உள்ளிட்டவை பாடத்திட்டங்களில் சேர்க்கப்படும் என்றார்.மேலும் அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து மதத்தினரும் கற்கும் வகையில் நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் இதுக்குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ஆலோசிக்க உள்ளதாகவும் கடந்த காலங்களில் பள்ளிகளில் நன்னெறி கல்வி நடத்தப்பட்டு வந்ததாகவும் கடந்த சில ஆண்டுகளாக இவை நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பள்ளிகளில் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நன்னெறி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக கர்நாடகத்தில் இஸ்லாமிய பெண்கள் வகுப்புக்குள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக நீதிமன்றம், அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

அதில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்றல்ல. அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது.இதனை எதிர்த்து 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், கர்நாடக பள்ளி பாடத்திட்டங்களில் மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை உள்ளிட்ட இந்துமத நூல்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பள்ளிகளில் பகவத் கீதை, குரான், பைபிள் கற்பித்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்பிக்க போதனை வகுப்புகள் எடுப்பதிலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பது குறித்து கர்நாடக அரசு இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.
