ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜார்க்கண்ட் தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை நேற்று  காலையில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் வந்தது. இடையில் பாஜக 33 இடங்களில் முன்னிலை பெற்று இழுபறி ஏற்பட்டது. பின் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்றது. ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 16 இடங்களிலும் ஆர்.ஜே.டி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. 

ஆளும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. 79 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  முதல்வர் ரகுபர் தாஸ் ஜம்சேத்புர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். ஜார்க்கண்ட் தேர்தலின் முடிவுகள் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசுக்கு ஜார்க்கண்ட் முடிவுகள் அதிர்ச்சியை உண்டாக்கி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே ஜார்க்கண்ட் வாக்காளர்களின் முடிவை ஏற்றுக்கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ஜார்க்கண்ட் வாக்காளர்களின் தீர்ப்பை பாஜக மதிப்பதாகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார். மேலும் 5 ஆண்டுகள் ஜார்க்கண்டை ஆள வாய்பளித்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், பாஜகவின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட தொண்டர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.