தண்ணீர் வழங்கல் மாநில அரசின் அதிகாரம்: ரவிக்குமார் எம்.பி., கேள்விக்கு மத்திய அரசு பதில்!
தண்ணீர் வழங்கல் மாநில அரசின் அதிகாரம் என ரவிக்குமார் எம்.பி., கேள்விக்கு மத்திய ஜலசக்தி துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில், உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு மத்திய பாஜக அரசு பதிலளித்து வருகிறது.
அந்த வகையில், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “பல்வேறு மாநிலங்களில் கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகளை வழங்கும்போது, சாதிப் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை அரசு அறிந்திருக்கிறதா? அப்படியானால், குடிநீர் இணைப்பை வழங்குவதில் சாதிய சார்புநிலை உள்ளதா என சரிபார்க்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதுவரை மாநிலவாரியாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? அதில் பட்டியல் சமூகத்தினரின் வீடுகள் எத்தனை?” ஆகிய வினாக்களை ரவிக்குமார் எம்.பி. எழுப்பியிருந்தார்.
அதற்கு ஜலசக்தி துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் அளித்த எழுத்துபூர்வமான பதில் அளித்துள்ளார். அதில், இந்தியா முழுதும் பட்டியல் சமூகத்தவர் எவ்வளவு குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் ஒன்றிய அரசிடம் இல்லை. குடிநீர் இணைப்பு வழங்கும்போது எஸ்சி, எஸ்டி குடியிருப்புகளுக்கு 10% முன்னுரிமை அளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கொடுத்த 17.07.2023 வரையிலான புள்ளிவிவரங்களின்படி இந்திய அளவில் எஸ்சி பிரிவினர் செறிந்து வாழும் பகுதிகளில் 60.83% குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜலசக்தி துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் அளித்துள்ள பட்டியலில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக எஸ்சி பிரிவினர் அதிகமாக உள்ள கிராமங்களில் இருக்கும் வீடுகள் 291256 எனவும் அதில் 208860 குடும்பங்களுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அது 71.71% எனவும் கூறப்பட்டுள்ளது. குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, நாகாலாந்து, லடாக், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம்: அமித் ஷா விரிவாக பதிலளிப்பார் - பாஜக அரசு தகவல்!
மேலும், “தண்ணீர் என்பது மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரம் என்பதால் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் திட்டமிடல், நடமுறைப்படுத்துதல் ஆகியவை மாநில அரசைச் சார்ந்தவை ஆகும். அதில் குறை இருந்தால் மாநில அரசுகளிடம்தான் கேட்கவேண்டும்.” எனவும் அவர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.