மணிப்பூர் விவகாரம்: அமித் ஷா விரிவாக பதிலளிப்பார் - பாஜக அரசு தகவல்!
மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் விரிவாகப் பதிலளிப்பார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 31 மசோதாக்களை நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. ஆனால், மணிப்பூர் வன்முறை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொதுசிவில் சட்டம், வேலையில்லா திண்டாட்டம், எதிர்க்கட்சிகளை ஒடுக்க விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனிடையே, மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் அரங்கேறி 77 நாட்கள் ஆன பிறகே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற பெண்களின் மீதான வன்முறைக்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால், குறுகிய கால விவாதத்துக்கே அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் விரிவாகப் பதிலளிப்பார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். மணிப்பூர் விஷயம் ஒரு முக்கியமான பிரச்சினை. விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் விரிவாகப் பதிலளிப்பார். விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக்கி அழைத்து சென்ற விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் கொடுப்போம்; இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூரில் மாண்ட மனிதம்... மோடியின் மவுனத்தை நாடு மன்னிக்காது: கார்கே விமர்சனம்!
மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களை நிர்வாணமாக அழைத்துச்செல்லும் வீடியோவை பகிர வேண்டாம் என ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளதால், சமூக ஊடகங்கள் இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் பின்னணி என்ன?
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நிலவி வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முதன்முதலாக மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை மணிப்பூர் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார்.
பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ITLF (பழங்குடியினர் தலைவர்கள் மன்றம்) என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் குகி-சோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது. “வன்முறை கும்பல் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்ததாகவும், அதிலிருந்து தப்பியோடிய ஐந்து பேர் கொண்ட குழுவை வன்முறை கும்பல் தாக்கியதாகவும் தெரிகிறது. தப்பியோடிய குழுவில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் இருந்துள்ளனர். மூன்று பெண்களையும் ஆடைகளை களைய சொல்லி அக்கும்பல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது. அதில் 19 வயதான பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு பெண்கள் தப்பி ஓடிய நிலையில், வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் அந்த கொடூர சம்பவத்தை தடுக்க முற்பட்டபோது வன்முறை கும்பலால் அவர் அடித்து கொல்லப்பட்டார்.” என ITLFஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில், கடந்த மே மாதம் 4ஆம் தேதியன்று நடந்த இந்த சம்பவம் 77 நாட்கள் கழித்து நேற்றுதான் வீடியோ மூலம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தவுபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹெராதாஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மேலும் பலரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் அமலில் இருக்க்கும் இணைய தடை காரணமாக இதுபோன்ற ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்தது என்பது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இது தொடர்பான தகவல் அம்மாநில பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர்கள் இதுபற்றி வெளியே தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
மணிப்பூரில் முழு அளவிலான இனக்கலவரம் நடந்து 78 நாட்களும், இரண்டு பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, பாலியல் வன்மொடுகை நடந்ததாக கூறப்படும் கொடூரமான சம்பவம் நடந்து 77 நாட்களும் ஆகிறது. இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 63 நாட்களாகியும், குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுவது பற்றியும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
மணிப்பூர் கலவரத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.