மணிப்பூரில் மாண்ட மனிதம்... மோடியின் மவுனத்தை நாடு மன்னிக்காது: கார்கே விமர்சனம்!
மணிப்பூரில் மனிதநேயம் மறித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்
மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியான சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடி அரசாங்கம் ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் பெருந்தீங்கு இழைக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மனிதநேயம் மறித்து விட்டது; இதில் பிரதமர் மோடியின் மவுனத்தை ஒருபோதும் நாடு மன்னிக்காது என தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, “உங்கள் அரசாங்கத்தில் மனசாட்டி சிறு துளியேனும் இருந்தால், மணிப்பூர் விவகாரம் குறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசின் இயலாமைக்கு மற்றவர்களை குறை சொல்லாமல், என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
“பிரதமர் மோடி தனது அரசியலமைப்பு பொறுப்பை கைவிட்டுவிட்டார்; இந்த நெருக்கடியான நேரத்தில், மணிப்பூர் மக்களுடன் நாங்கள் ஒன்றாக நிற்கிறோம்.” எனவும் கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மணிப்பூரில் முழு அளவிலான இனக்கலவரம் நடந்து 78 நாட்களும், இரண்டு பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, பாலியல் வன்மொடுகை நடந்ததாக கூறப்படும் கொடூரமான சம்பவம் நடந்து 77 நாட்களும் ஆகிறது. இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 63 நாட்களாகியும், குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.” என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
“மணிப்பூரில் அமலில் இருக்க்கும் இணையதளம் தடை காரணமாக இதுபோன்ற ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்தது என்பது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, மணிப்பூர் முதல்வரிடம் பேசவோ அல்லது அறிக்கை வெளியிடவோ 76 நாட்கள் காத்திருந்தது முற்றிலும் மன்னிக்க முடியாதது. இந்த சம்பவம் மத்திய அரசுக்கோ, உள்துறை அமைச்சருக்கோ, பிரதமருக்கோ தெரியாமல் இருந்ததா? எல்லாம் நலமாக இருக்கிறது என்ற நாடகத்தை மோடி அரசு எப்போது நிறுத்தும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.
முன்னதாக, மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.