Bank Robbery: வங்கியில் கொள்ளையடிக்க வந்த கும்பலை அடித்து விரட்டிய பெண் காவலர்கள்
பீகார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை இரண்டு பெண் காவலர்கள் விரட்டி அடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பீகார் மாநிலம் ஹாஜிபூர் மாவட்டம் செந்துவாரி சௌக் பகுதியில் உத்தர பீகார் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. சாந்தி குமாரி, ஜூஹி குமாரி ஆகிய இரண்டு பெண் காவலர்கள் இந்த வங்கியின் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள்.
புதன்கிழமை காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் முகமூடி அணிந்துபடி வங்கிக்குள் நுழைந்தார்கள். பாதுகாப்புப் பணியில் இருந்த இரு பெண் காவலர்களுக்கும் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வங்கி பாஸ்புக்கைக் காட்டுமாறு கேட்டனர்.
உடனே அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டி மிரட்டினர். அவர்களது பூச்சாண்டிக்கு பயப்படாமல், பெண் காவலர்கள் இருவரும் தங்கள் கையில் இருந்த துப்பாக்கிகளால் அவர்களை வெளுத்து வாங்கிவிட்டனர். இதனிடையே, ஜூஹி தனது துப்பாக்கியைச் சுடுவதற்கு ஆயத்தப்படுத்தினார்.
நடுரோட்டில் ஸ்கூட்டரில் ஆபாசம்... வைரல் வீடியோ மூலம் சிக்கிய வாலிபர்
அப்போது உஷாரான அவர்கள் விட்டால் போதும் என்று பைக்குகளைக்கூட அங்கேயே விட்டுவிட்டு அலறி அடித்துக்கொண்டு தப்பியோடினர்.
துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்களை பெண் காவலர்கள் துணிச்சலாக செயல்பட்டு விரட்டி அடித்த காட்சி வங்கியின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த அந்த வீடியோ காட்சி இப்போது சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
கொள்ளை முயற்சி பற்றி தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி மணீஷ் அந்த வங்கிக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். பெண் காவலர்களின் இந்த வீரச் செயலுக்காக பரிசு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தப்பி ஓடிய கொள்ளையர்களைத் தேடும் பணியை பீகார் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
உள்ளாடைக்குள் ஒளித்து வைத்து கடத்திய ரூ.1.59 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்