உள்நாட்டுத் தயாரிப்பில் 'ஸ்கார்பீன்' ரகத்தில் 2-வதாக உருவாக்கப்பட்ட ‘கந்தேரி’ நீர்மூழ்கி போர்க்கப்பல் மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பரிசோதனைக்காக கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

அதிநவீன கந்தேரி நீர்மூழ்கிபோர்க்கப்பல், எதிரி போர்க்கப்பல்களை எதிர்த்து தாக்கும் வல்லமையும், நீருக்கு அடியிலும், மேற்புறத்திலும்வந்து ஏவுகணைகளை ஏவும் திறனும் உண்டு. கண்காணிப்பு பணி, நீருக்குள் போரிடும் தன்மை, கடலுக்கு மேல் வந்து போரிடும் தன்மை, உள்ளிட்ட அதிநவீன வசதிகளைக் இந்த கப்பல் கொண்டுள்ளது. இந்த நீர்மூழ்கி போர்க்கப்பல் அனைத்து விதமான சூழலிலும், வெப்பமான காலங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது.

6 ஸ்கார்ப்பைன் கப்பல்

கடந்த 2005-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டி.சி.என்.எஸ். நிறுவனத்தின் உரிமையை பெற்று 6 நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் உருவாக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த திட்டம் 'புராஜக்ட் 75' என்று பெயர்சூட்டப்பட்டது. இதன்படி 6 ஸ்கார்பைன் கப்பல்கள் மும்பைமசாகான் கப்பல்படைத்தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.  இதில், முதலாவதாக ஐ.என்.எஸ். கல்வாரி எனும் நீர்மூழ்கி போர்க் கப்பல் கடந்த ஆண்டு மே மாதம் சோதனை ஓட்டத்துக்காக கடலுக்குள் இறக்கிவிடப்பட்டது.

2-வது கப்பல்

அந்த வகையில் ஸ்கார்பைன் ரகத்தில் 2-வது நீர்மூழ்கி போர்க்கப்பலான கந்தேரி எனும் கப்பல் மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து நேற்று கடலுக்குல் இறக்கப்பட்டது.

தொடக்கம்

இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தொடங்கி வைத்தார்.  அவரின் மனைவி பினா பாம்ரே கப்பல் கடலுக்குள் இறங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். உடன் கப்பல்படைத்தளபதி சுனில் லம்பாவும் உடன் இருந்தார்.

மே மாதம்

கடலுக்குள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள கந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் இந்த ஆண்டு இறுதியில் கப்பற்படையில் சேர்க்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் சோதனைக்காக இறக்கப்பட்ட கல்வாரி நீர்மூழ்கிக்கப்பல் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் கப்பல் படையில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய அத்யாயம்

இது குறித்து கப்பல்படை தளபதி சுனில் லம்பா நிருபர்களிடம் கூறுகையில், “ உலக நாடுகளின் நீர்மூழ்கி போர்க்கப்பல்களோடு ஒப்பிடும் போது, கந்தேரி மிகச்சிறந்த கப்பலாகும். இந்த ஆண்டு கப்பல் படை 50-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.  புராஜெக்ட் 75 நீர்மூழ்கிக்கப்பல்கள் நமது நீர்மூழ்கி கப்பல்களின் திறனை வளர்ப்பதில் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

இந்திய கடற்படையில் 14 நீர்மூழ்கிப் போர்க்கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ரஷிய தயாரிப்பிலான 9 கப்பல்களும், ஜெர்மனி தயாரிப்பிலான 4 கப்பல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.