வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்!
வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு 4,5,6,7ஆவது கட்டம் என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இறுதிகட்டமாக ஜகத்சிங்பூர், கேந்த்ராபாரா, பாலசோர் உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல், மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அம்மாநிலத்தில் பிஜு ஜனதாதளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் ஐஏஸ் அதிகாரியும், பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவரும், நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானவரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும், வி.கே.பாண்டியன் ஆட்சியை கையகப்படுத்த முயற்சிக்கிறார் எனவும், ஒடிசாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கோலோச்சுகிறார் எனவும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். ஒடிசாவை சேர்ந்தவரே ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டும்; அதுதான் ஒடிசாவின் பெருமை என்ற தேர்தல் பிரசாரத்தையும் பாஜகவினர் முன்னெடுத்தனர்.
அதேசமயம், ஒடிசா மண்ணின் மைந்தன் முதல்வராக பதவியேற்பார் என சர்ச்சைகளுக்கு வி.கே.பாண்டியன் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். பிஜூ ஜனதாதளம் கட்சியின் எதிர்கால தலைவரை ஒடிசா மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் ஒடிசாவின் நீண்ட கால முதல்வரான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக்கின் கேட் கீப்பராக வி.கே.பாண்டியன் செயல்படுகிறாரா? அரசு, கட்சி மற்றும் நவீன் பட்நாயக் சார்ந்த அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த நவீன் பட்நாயக், “இது அபத்தமானது. இதனை இதற்கு முன்பே பலமுறை நான் கூறியுள்ளேன். இது பழைய குற்றச்சாட்டு, அதில் எந்த உண்மையும் இல்லை.” என்றார். வி.கே.பாண்டியனை தனது வாரிசாக கூறும் பேச்சுகள் மிகைப்படுத்தப்பட்டவை எனவும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மேடை ஒன்றில் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதில், அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருக்க அதனை கேமராவில் இருந்து மறைக்க தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் முயற்சி செய்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் பாஜக ஆட்சியமைந்ததும் முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்றார்.
விவேகானந்தர் பாறையில் தியானம்: கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி!
இந்த நிலையில், தனது உடல்நிலை குறித்து பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், “நான் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என பிரதமரிடம் உறுதியளிக்கிறேன். கடந்த ஒரு மாதமாக மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் அவருடைய நல்ல நண்பன் என்று அவர் கூறியுள்ளார். எனது உடல்நிலை குறித்து செல்போன் மூலம் அவர் கேட்டறிந்திருக்கலாம். ஆனால், ஒடிசா மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஏராளமான பாஜகவினர் எனது உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர்.” என விளக்கம் அளித்தார்.
நான் அவருக்கு நல்ல நண்பன் என்று பொதுக்கூட்டங்களில் பிரதமர் கூறியுள்ளார். அப்படியென்றால், இந்த வதந்திகளை கேள்விப்பட்டு கவலைப்பட்டால், தொலைபேசியை எடுத்து என்னிடம் அவற்றைப் பற்றிக் கேட்பது அவருடைய கடமையல்லவா? எனவும் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பியுள்ளார்.