Viral Video Showing Haryana Bus Driver Smoking Hookah Lands Him in Trouble

ஹரியானா போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவர், ஹூக்கா புகைத்துக் கொண்டே பஸ்ஸை தில்லி சாலையில் இயக்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த பஸ்ஸைக் கடந்து சென்ற மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த நபர் தன் செல்போனில் எடுத்த வீடியோ இது. அதில், தனது இடது கையினால் பஸ் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு வண்டியை ஓட்டுகிறார். தன் வலது கரத்தில் ஹூக்காவை வைத்துப் புகைத்துக் கொண்டே வண்டியை ஓட்டுகிறார். அதிவேக எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த பஸ்ஸை அவர் இயக்கிக் கொண்டு செல்கிறார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது வீடியோ, வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாக பரவவே, இது தில்லி அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனைக் கண்ட தில்லி அரசின் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் எஸ்.கே.அரோரா, தில்லி போக்குவரத்துத் துறை ஆணையருக்கும், ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறை ஆணையருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஹரியானா போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான HR 55 W 9038 எண் பஸ்ஸை, அதன் ஓட்டுநர் ஹூக்கா புகைத்துக் கொண்டேதில்லி சாலையில் இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது. தலைநகரில் மிகவும் பெருமித உணர்வுடன், அச்சம் எதுவும் இன்றி ஹூக்கா புகைத்துக் கொண்டே பஸ்ஸை ஓட்டும் அந்த டிரைவர், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் தடைச் சட்ட விதிகளை (COTPA- 2003) மீறியுள்ளார்.

அரசு வாகனங்களில் புகை பிடிப்பதை அந்தச் சட்டத்தின் 4வது பிரிவு தடை செய்கிறது. அந்த பஸ்ஸில் இடம்பெற்றுள்ள புகையிலைப் பொருள்கள், படாகா பீடி தொடர்பான விளம்பரம், இந்த சட்ட விதியின் பிரிவு 5 ஐ மீறுகிறது. பஸ்ஸில் படகா டீ விளம்பரம் இடம்பெற்றிருக்கிறது. இதுவும் இந்த சட்டத்தினை மீறிய செயல். 

விளம்பரத்தைப் பொறுத்த அளவில், இது படாகா குழும நிறுவனம் மற்றும் ஹரியானா மாநில போக்குவரத்துத் துறை செய்துள்ள சட்ட மீறல். இந்த விளம்பரங்கள், சிறுவர்கள், பெண்களின் கவனத்தைக் கவர்ந்து இழுப்பவை. 

பேருந்தை ஓட்டியபோது ஹூக்கா புகைத்ததன் மூலம், பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளார் அந்த டிரைவர். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்... என்று எஸ்.கே.அரோரா அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.