இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்ட்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறிய நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
பழங்குடியின அந்தஸ்து கோரும் மெய்ட்டீஸ் சமூகத்தினருக்கும் மற்ற பழங்குடியினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. புதன்கிழமை இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரு தரப்பினரும் நடத்திய பேரணியின்போது கலவரம் மூண்டது. மோதலின்போது, பல வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.
தீ வைக்கப்பட்ட வீடுகளில் வசித்துவந்த மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், மணிப்பூர் - மியான்மர் எல்லையில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரோ என்ற கிராமத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக வங்கி தலைவர் ஆகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா
இந்நிலையில், இம்பால் மேற்கு, காக்சிங், தௌபால், ஜிரிபாம், பிஷ்னுபூர், சுராசந்த்பூர், காங்போக்பி, தெங்னௌபால் ஆகிய எட்டு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இம்பாலின் சில பகுதிகளில் இன்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இன்று ஆயுதப்படை அணிவகுப்பு நடத்தப்பட்டது.
"மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக வரவழைக்கப்பட்ட இந்திய இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் 7,500க்கும் மேற்பட்ட பொதுமக்களை இரவோடு இரவாக மீட்டுள்ளனர். மணிப்பூர் மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு இந்திய இராணுவம் உறுதியுடன் உள்ளது" என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிரடிப் படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதடனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று முதல்வர் பைரன் சிங்கை சந்தித்துப் நிலைமையை விசாரித்து அறிந்தார்.
