இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை முற்றிலும் மாறியுள்ளதாகவும் இந்தியாவை வேறுபட்ட கோணத்தில் உலக நாடுகள் பார்க்க தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை முற்றிலும் மாறியுள்ளதாகவும் இந்தியாவை வேறுபட்ட கோணத்தில் உலக நாடுகள் பார்க்க தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அடுத்த 25 ஆண்டு கால வளர்சிக்கான அடித்தளமாக இந்த பட்ஜெட் இருக்கும் எனக்கூறி உரையை தொடங்கினார். அவருடைய பட்ஜெட்டுக்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவிக்கும் நிலையில் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். பெருமுதலாளிகள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக ஏழைகள், நடுத்தர மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மற்றொரு புறம் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பட்ஜெட்டை பெருமளவும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் 75 ஆவது சுதந்திரத்தை நாம் கொண்டாடும் வேளையில் கொரோனா பெருந்தொற்று, இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளுக்கும் எண்ணற்ற பிரச்னைகளை கொண்டு வந்துள்ளது. பெருந்தொற்றுக்கு பின்னர், உலகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை முற்றிலும் மாறியுள்ளது. இந்தியாவை வேறுபட்ட கோணத்தில் உலக நாடுகள் பார்க்க தொடங்கியுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு மிகச்சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டுக்கு கொடுத்துள்ளார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பாஜக தொண்டர்களாகிய உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடுகள் ஏழைகளின் வாழ்வில் நலன் சேர்க்கும். நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெறுவதை இலக்காக வைத்துள்ளோம். கிராமங்களில் வளர்ச்சியை கொண்டு வருவோம். அனைத்து அத்தியாவசிய வசதிகளும், அங்கு கிடைக்க செய்ய வேண்டும். மத்திய பட்ஜெட் பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தொலைநோக்கு பார்வையை விரிவுபடுத்தும் இலக்கு கொண்டதாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியை கொண்டு சென்று சேர்க்கும். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும். இந்த பட்ஜெட் நாட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும். இதன் மூலம் சுயசார்படைந்த நாடாக இந்தியா மாற வேண்டும். நவீன இந்தியாவிற்கு சுயசார்பு கட்டாயம் தேவை என்று தெரிவித்தார்.
