மூத்த காங்கிரஸ் தலைவர் வக்கோம் புருஷோத்தமன் காலமானார்!
மூத்த காங்கிரஸ் தலைவரும், மிசோரம் முன்னாள் ஆளுநருமான வக்கோம் புருஷோத்தமன் காலமானார்
மூத்த காங்கிரஸ் தலைவரும், மிசோரம் முன்னாள் ஆளுநருமான வக்கோம் புருஷோத்தமன் காலமானார். அவருக்கு வயது 96. வக்கோம் புருஷோத்தமன் 1946 ஆம் ஆண்டில் மாணவர் காங்கிரஸில் சேர்ந்தார். வக்கோம் பஞ்சாயத்து உறுப்பினராக 1953ஆம் ஆண்டு தேர்வான அவர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் என படிப்படியாக உயர்ந்து, அம்மாநில காங்கிரஸ் தலைவராக உயர்ந்தார்.
1970, 1977, 1980 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் அட்டிங்கல் தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வக்கோம் புருஷோத்தமன், அம்மாநில அமைச்சரவையில் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றியுள்ளார். கேரள சட்டசபை சபாநாயகராக பதவி வகித்த அவர், இரண்டு முறை மக்களவைக்கும் தேர்வாகியுள்ளார்.
மணிப்பூரில் நிலைமை எப்படி உள்ளது? விசிக தலைவர் திருமாவளவன் தகவல்!
அந்தமான் நிகோபர் துணை நிலை ஆளுநராக பதவி வகித்த அவர், மிசோரம் மாநில ஆளுநராக 2011ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, நாகாலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால், 2014ஆம் ஆண்டில் தனது ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், வயோதிகம் காரணமாக ஏற்படும் நோய்களால் அவதிப்பட்டு வந்த வக்கோம் புருஷோத்தமன் காலமானார். அவருக்கு வயது 96. இந்த தகவலை கே.ஐ.எம்.எஸ். மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.