மணிப்பூரில் நிலைமை எப்படி உள்ளது? விசிக தலைவர் திருமாவளவன் தகவல்!

வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என மணிப்பூர் இரு சமூக மக்களும் வருந்தியதாக விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்

How the situation is in manipur vck mp thirumavalavan answer

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு சென்றது. கடந்த 29, 30 ஆகிய தேதிகளில் அம்மாநிலத்தில் முகாமிட்டிருந்த எம்.பி.க்கள் குழு, அம்மாநிலத்தின் நிலைமை குறித்து ஆய்வு செய்தது. பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளை எம்.பி.க்கள் குழு கேட்டறிந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பாக மணிப்பூர் சென்று திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரும் உடனிருந்தார்.

அப்போது பேசிய திருமாவளவன், “மணிப்பூரில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றனர்.” என குற்றம் சாட்டினார்.

வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என மெய்தி, குகி என இரு சமூக மக்களும் மத்திய, மாநில அரசுகள் மீதான வருத்தத்தை வெளிப்படுத்தியதாகவும், மாநில அரசு போதிய பாதுகாப்பு மற்றும் நிவாரண  நடவடிக்கைளை மேற்கொள்ளவில்லை என மெய்தி சமூக மக்கள் புகார் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

முகாம்களில் முன்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை, நல்ல உணவு இல்லை என மக்கள் புகார் தெரிவித்ததாகவும் திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “குகி சமூக மக்கள் மெய்தி சமூக மக்களோடு சேர்ந்து இனிமேல் தங்களால் வாழ இயலாது. ஏனெனில் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று தங்குவதற்கு பாதுகாப்பு இல்லை என்ற வருத்ததை அவர்கள் பதிவு செய்தனர். இதேபோல் மெய்தி சமூக மக்கள் துச்சத்பூர் மாவட்டத்திலிருந்து வெளியேறிவிட்டோம்; மீண்டு அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்று தெரிவித்தனர். மியான்மரில் இருந்து பலர் புலம்பெயரந்து மணிப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களால்தான் இங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது, எனவே என்.ஆர்.சி-யை அமல்படுத்த வேண்டும். மியன்மாரில் இருந்து வந்தவர்களை திரும்ப அனுப்ப வேண்டும் என மெய்தி சமூக பெண்கள் கோரிக்கை வைத்தனர்.” என்றார்.

புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

மேலும், “மணிப்பூர் ஆளுநரை சந்தித்தோம், மீண்டும் மணிப்பூரில் சுமூகமான வாழ்க்கை அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும், அமைதி திரும்பும் என நம்புகிறோம். மணிப்பூர் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

அதேபோல், “மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை. அரசு மீது மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு பால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்கள் எதிர்காலம் குறித்த மிகுந்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.” என இந்தியா கூட்டணி சார்பாக மணிப்பூர் சென்று திரும்பிய கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios