பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரம் அளித்தது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இங்கு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாள் தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதாலும், அமெரிக்க டாலர்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று தொடர்ந்து 5–வது நாளாக விலை அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து ரூ.81.35 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து 73.88 ஆகவும் உள்ளது. 

டீசல் விலை விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலை அதிகரிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ? என பொதுமக்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது வாகனங்களை ஓரம்கட்டிவிட்டு அலுவலகங்களுக்கு சைக்கிளில் செல்லலாமா ? என யோசிக்க வைத்துள்ளது.