மத்திய பிரதேசத்தில் இளைஞரை கடித்த ஒரு விஷப் பாம்பு உயிரிழந்தது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
Snake Died After Biting Youth: 'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என்பார்கள். பாம்பு தன்னிடம் வைத்திருக்கும் விஷமே இதற்கு காரணம். ஒரு விஷமுள்ள பாம்பு ஒரு மனிதனை தீண்டினால் மனிதனின் உயிர் போய் விடும். அதுவும் ராஜ நாகம் போன்ற கொடிய விஷமுள்ள பாம்பு மனிதனை கடித்தால் சில நொடிகளில் உயிர் பிரிந்து விடும். இதனால் தான் பாம்பை கண்டால் அனைவரும் தெறித்து ஓடுகிறார்கள்.
இளைஞரை கடித்த விஷப் பாம்பு உயிரிழப்பு
பாம்பு கடித்து மனிதன் இறந்த செய்தியை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஆனால் மனிதனை கடித்த ஒரு விஷப் பாம்பு இறந்ததை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அதாவது மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை ஒரு மனிதனைக் கடித்த 5 நிமிடங்களுக்குள் ஒரு விஷப் பாம்பு இறந்தது.
தற்செயலாக பாம்பை மிதித்தார்
இந்த சம்பவம் பாலகாட்டின் குட்சோடி கிராமத்தில் பதிவாகியுள்ளது. தற்போது, அந்த நபர் ஆபத்தில் இருந்து மீண்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்டவர் கார் மெக்கானிக்காக பணிபுரியும் 25 வயது சச்சின் நாக்பூரே. இவர் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் தனது பண்ணைக்குச் சென்றார். அப்போதுதான், அவர் தற்செயலாக ஒரு விஷப் பாம்பை மிதித்து விட்டார். இதனால் கோபமடைந்த பாம்பு அவரை கடித்து விட்டது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இதனால் சச்சின் நாக்பூரே அதிர்ச்சி அடைந்து வலியால் துடித்தார். அதே வேளையில் அவரை கடித்த பாம்பு அடுத்த 5 அல்லது 7 நிமிடங்களுக்குள் துடிதுடித்து இறந்தது. இதைப் பார்த்த சச்சின் நாக்பூரே, தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் விரைந்து வந்து அவரையும், இறந்துபோன பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சச்சின் நாக்பூரேவுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷப் பாம்பு உயிரிழந்தது ஏன்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு மனிதனைக் கடித்த பிறகு ஒரு பாம்பு இறப்பது மிகவும் அரிது. இந்த அசாதாரண வழக்கில், இரண்டு சாத்தியமான காரணங்கள் இருக்கலாம். சச்சின் நாக்பூரே சிட்சிடியா, பிசுண்டி, பல்சா, ஜாமுன், மா, துவார், ஆஜன், கரஞ்சி மற்றும் வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களின் கிளைகளைப் பயன்படுத்தி கடந்த 7-8 ஆண்டுகளாக பல் துலக்கி வருவதாக தெரிவித்தார்.
அரிதிலும் அரிதான நிகழ்வு
இந்த மூலிகை மரங்களின் கலவையானது பாம்பின் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்கி, அதன் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சச்சின் நாக்பூரே நம்புகிறார். வனத்துறை ரேஞ்சர் தர்மேந்திர பிசென் இதை 'அரிதிலும் அரிதான' நிகழ்வு என்று அழைத்தார். ஒரு பாம்பு ஒரு நபரைக் கடித்த உடனேயே இறக்கக்கூடும் என்று அவர் விளக்கினார். ஒரு வேளை மனிதனை கடித்த பிறகு கூர்மையாக முறுக்கினால் பாம்பின் விஷப் பை உடைந்து, அதன் திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
விஷம் பாம்புக்கு அல்ல என நண்பர்கள் கிண்டல்
சச்சின் நாக்பூரேவை கடித்தது சாதாரண விஷப் பாம்பு அல்ல; டோங்கர்பெலியா எனப்படும் கொடிய வகை விஷப் பாம்பு ஆகும். ''அடப்பாவி! உன்னை கடிச்ச பாம்பே சொத்து போச்சே. அப்போ விஷம் பாம்பிடம் இல்லை. உன்னிடம் தான் இருக்கு'' என சச்சின் நாக்பூரேவை அவரது நண்பர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
