வரும் 2020ம் ஆண்டில் அரசியலில் இருந்து விலகி விடுவேன், அதன்பின் கிராமத்தில் மக்களுக்கு சேவை செய்து வாழ்க்கை கழிப்பேன் என்று பா.ஜனதா கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் ‘மீட் அன்ட் க்ரீட்’ என்ற நிகழ்ச்சி நேற்றுமுன்தினம்  நடந்தது. இதில் பா.ஜனதா கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்,  வெங்கையா நாயுடு முதல்முறையாக ஐதராபாத்துக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது-

பா.ஜனதா கட்சியில் சிறுவயதில் இருந்து இருக்கிறேன். ஆனால், துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், என்னால் பா.ஜனதா அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. துணை ஜனாதிபதி பதவி என்பது, கட்சிக்கு அப்பாற்பட்டது என்பதால், என்னால் பா.ஜனதா அலுவலகத்துக்கு செல்ல முடியவில்லை.

நீண்டகாலத்துக்கு முன்பே நான் அரசியலைவிட்டு விலக முடிவு எடுத்துவிட்டேன். 2020ம் ஆண்டில் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, என் சொந்த கிராமத்தில் மக்களுக்கு சமூக சேவை செய்ய முடிவு செய்து இருந்தேன். இந்த முடிவை நான் பிரதமர் மோடியிடம் இது குறித்து கூறினேன்.

2019ம் ஆண்டுக்கு பின்பும், மோடியே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என நம்புகிறேன். பா.ஜனதா எனக்கு தாய் போன்றது. அந்த கட்சியை விட்டு நான் செல்வது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

நான் எந்த அரசியலமைப்பு பதவியையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதை கட்சித் தலைமையிடம் தெரிவித்து  இருந்தேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தினார்கள். குறிப்பாக மோடி என்னிடம் விவசாயக் குடும்பத்தில் இருந்து ஒருவர் வர வேண்டும் எனக்கூறியதால் நான் ஏற்றுக்கொண்டேன்.

என் தந்தை, முன்னோர்கள் யாரும் அரசியலில் இருந்தது இல்லை. எனக்கு காந்தி, நேரு போல பட்டங்களும் வேண்டாம். ஆனால், எனக்கு அனைத்தையும் இந்த கட்சி கொடுத்து இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.