மின்சாரத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை இந்தியாவில் ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்த போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 

திருத்தப்பட்ட மோட்டார் வாகன மசோதாவில் வாகனப் பதிவு மற்றும் வாகன மறுபதிவிற்கான கட்டணம் 20 மடங்கு உயர்த்தப்படுகிறது. தற்போது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிவுக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி ரூ.5,000 வசூல் செய்யப்படும். மேலும் கார்களுக்கான மறு பதிவுக் கட்டணம் ரூ.15,000 ஆக உயர்த்தப்படவுள்ளது.

இரு சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 700 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. (15 ஆண்டுகளுக்குப் பிறகு) இருசக்கர வானங்களுக்கான பதிவைப் புதுப்பிப்பதாக இருந்தால் அதற்கு ரூ.2,000 பதிவுக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். 

மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.5,000 ஆக உயர்த்தப்படவுள்ளது. கனரக வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் 2,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாக உயர்கிறது. 

எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பயன்பாட்டை உயர்த்தும் வகையிலும் வாகனப் பதிவுக் கட்டணங்களை மத்திய அரசு பல மடங்கு உயர்த்துகிறது.

தங்களது பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு இக்கட்டண உயர்வு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய வானங்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டை அதிகமாக ஏற்படுத்துவதால் அவற்றைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.