தக்காளிக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு: காய்கறி வியாபாரி கைது!
தக்காளிக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்த காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கனமழை, வரத்து குறைவு காரணமாக தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தக்காளி கிலோ ஒன்று ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையை குறைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், தக்காளியை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை காய்கறிக்கடைக்காரர் ஒருவர் நியமித்திருந்தார். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிலையில், தக்காளிக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்த காய்கறி வியாபரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள லங்கா பகுதியில் மளிகை, காய்கறி வியாபாரம் செய்து வருபவர் அஜய் யாதவ். இவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர். அஜய் யாதவின் காய்கறிக் கடையை ஜக்நாராயண் யாதவ் மற்றும் அவரது மகன் விகாஸ் யாதவ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்டு 2 முதல் தினசரி விசாரணை
இந்த நிலையில், தக்காளி விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தனது கடையில் தக்காளிக்கு பாதுகாப்பாக இரண்டு பவுன்சர்களை அஜய் யாதவ் நியமனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவில், “தக்காளி விலை மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது. எனது கடைக்கு தக்காளி வாங்க வருபவர்கள் பேரம் பேசும்போது சில சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீருடையில் இரண்டு பவுன்சர்களை நியமித்துள்ளேன். அவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பர்.” என தெரிவித்திருந்தார்.
அஜய் யாதவின் கடையில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.140 முதல் 160 வரை விற்கப்படும் நிலையில், பவுன்சர்களை எவ்வளவு சம்பளத்தில் அவர் பணியமர்த்தினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்த கேள்விக்கு, பவுன்சர்கள் இலவசமாக கிடைப்பதில்லை என பதிலளித்திருந்தார்.
அஜய் யாதவ், தக்காளிக்கு பாதுகாப்பாக பவுன்சர்களை நியமித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாஜக அரசை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தக்காளிக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்த விவகாரம் தொடர்பாக, அஜய் யாதவ் காடையில் காய்கறி வியாபாரம் செய்யும் ஜக்நாராயண் யாதவ் மற்றும் அவரது மகன் விகாஸ் யாதவ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜய் யாதவ் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டுவது, பகைமை ஊக்குவித்தல், அவதூறு பரப்புவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.