ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி!
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
இதையடுத்து, ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதி வளாகத்தில் தொல்லியல் ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது நியாயமானது; நீதியின் நலனில் அறிவியல்பூர்வ ஆய்வு அவசியம் எனவும் தீர்ப்பளித்தது.
அதன்படி, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. அதன்பிறகு ஆய்வை நிறைவு செய்ய தொல்லியல் துறைக்கு 6 முறை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. மொத்தம் 2150.5 சதுர மீட்டர் பரப்பளவுக்கு வேலி அமைத்து ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை, தனது ஆய்வினை நிறைவு செய்து 839 பக்க ஆய்வறிக்கையை சீலிட்ட கவரில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சமர்ப்பித்தது.
ஹேமந்த் சோரனின் 1300 கி.மீ கார் பயணம்: யார் கண்ணிலும் சிக்காமல் எப்படி ஜார்கண்ட் வந்தார்?
அந்த ஆய்வறிக்கை விவரங்கள் உடனடியாக வெளியிடப்பட்டால் சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்பதால் அதனை வெளியிடாமல் வாரணாசி நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதன்பிறகு, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, இந்து, முஸ்லிம் தரப்புக்கு அதன் நகல் வழங்கப்பட்டது.
அதன்படி, வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாக தங்களது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக தென்பட்ட ஆதரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
பாஜக கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார்: தேர்தலில் பலன் தருமா? பீகார் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை காசி விசுவநாதர் கோயில் அறக்கட்டளை நியமிக்க வேண்டும் என்றும், பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 7 நாட்களுக்குப் பின் பூஜைகள் நடத்திக் கொள்ளவும் இந்துக்களுக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஏழு நாட்களுக்குள் பூஜைகள் நடத்தப்படும் என இந்து பிரிவினர் அறிவித்துள்ளனர்.