வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி.. பதறியடித்து மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை 24 அன்று போபாலில் இருந்து குவாலியர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த பயணி ஒருவர் ஐஆர்சிடிசி (IRCTC) வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பயணி ட்விட்டரில் உணவின் பல படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இது இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்விகளை எழுப்ப வழிவகுத்தது என்றே சொல்லலாம். மேலும், அதே ரயிலில் பயணம் செய்த பலர், சுகாதாரமற்ற உணவை உட்கொண்டதாகவும், அதனால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் பதிவில் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே சேவா புகாருக்கு பதிலளித்தது. அதில், “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. ''இந்த விரும்பத்தகாத அனுபவத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்கள் பிஎன்ஆர் மற்றும் மொபைல் எண்ணை எங்களுடன் நேரடி செய்தியில் (டிஎம்) பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என்று பகிரப்பட்டுள்ளது. அவரது ட்வீட்டிற்கு பதிலளித்த ஐஆர்சிடிசி, “ஐஆர்சிடிசி இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு மாற்று உணவை ஏற்பாடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபாலின் கோட்ட ரயில்வே மேலாளரும் ட்வீட் செய்துள்ளார், ஐஆர்சிடிசி உடனடியாக பயணிகளுக்கு மாற்று உணவை ஏற்பாடு செய்ததாகவும், உரிமம் பெற்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறினார். தவறுதலுக்கு காரணமான உரிமதாரரை எச்சரித்து, ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டதாக மேற்கு மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!