இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா கட்டுப்படுத்த முடியாததால், கட்டாயத்தின் பேரில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனாவால் கஷ்டப்படுவதை விட இந்த ஊரடங்கால் பசியாலும், மன அழுத்தத்தாலும் படும் கஷ்டமே அதிகமாகவுள்ளது. 

ஊரடங்கால் அனைவருமே வீடுகளில் முடங்கியுள்ளதால் பெண்களுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாகவும், பெண்கள் மீதான அழுத்தம் அதிகரித்திருப்பதாகவும் பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

இப்படியான சூழலில், உத்தர பிரதேச மாநிலம் வதோதராவில் நடந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வதோதராவில் தனது 24 வயது மனைவியுடன் ஆன்லைனில் லூடோ என்ற கேம் ஆடியுள்ளார். அவரது மனைவி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். தொடர் தோல்விகளால் விரக்தியும் ஆத்திரமும் அடைந்த கணவன், மனைவியை கொடூரமாக தாக்கியதில் அந்த பெண்ணின் முதுகெலும்பு காயமடைந்தது. 

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த பெண், தனது கணவருடன் செல்லாமல் தனது பெற்றோருடன் செல்வதாக முடிவெடுத்து சென்றுவிட்டார். அதேநேரத்தில் தன் மீது கொடூர தாக்குதல் நடத்திய தனது கணவர் மீது புகாரளிக்காமல் மன்னித்துவிட்டார். அதனால் தனது தவறை உணர்ந்து மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். அவர் புகாரளிக்காததால் வழக்குப்பதிவு செய்யாத போலீஸார், அந்த நபரை கண்டித்து அனுப்பினர்.