கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 6 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான ஆயுதம் தடுப்பூசி

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனாவால் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்தனர் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். கோடிக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்வது என்பது தெரியாமல் மக்கள் தவித்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக மிகப்பெரிய ஆயுதமாக பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் கோவிசீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பரவலாக செலுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படவில்லை.

6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 187 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதே போல 18 வயது மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு சிறுவர்களையும் அதிக அளவு பாதிக்க கூடிய நிலையில் அவர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக பாரத் பயோடெக் நிறுவனம் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தது. இதனையடுத்து ஆய்வு பணி முடிவடைந்ததையடுத்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி 6 வயது முதல் 12 வயதுடைய சிறுவர், சிறுமியர்களுக்கு செலுத்த இந்திய மருத்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. இந்தநிலையில் மருத்துவ நிபுரணர்கள் ஆய்வுக்கு பிறகு தற்போது 6 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பார்

கொரோனா பாதிப்பு தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் சிறுவர், சிறுமிகளையும் பாதுகாக்க தற்போது கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

சென்னை ஐஐடியில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா..? 6 நாட்களில் 110ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு