உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம்  ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. 
 
அதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதிக்குள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் தேர்வுக்கு பதிவு செய்யும்போதும், தேர்வு எழுத வரும்போதும், ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ஏதேனும் ஒரு மாணவன் ஆதார் இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் போனால் அதற்கு  அவர் பயிலும் பள்ளியின் முதல்வர்தான் பொறுப்பு என்றும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனுமதி கார்டுடன், ஆதார் கார்டையும் தேர்வு எழுதும் அறைக்கு எடுத்து வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் 9ம் வகுப்பில் சேரவிருக்கும் மாணவர்களும் ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.