Uttarakhand Election Results 2022 : உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை தாண்டி 42 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. உபியை தொடர்ந்து,  உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கிறது. 

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் 82.4 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 56, காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. காங்கிரசுக்கு 33.5 சதவீதம், பாரதிய ஜனதாவுக்கு 46.5 சதவீதம் வாக்குகள் கிடைத்து இருந்தன.

இந்த தடவையும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக மோதி வருகின்றன. ஆனால் ஆம் ஆத்மி இடையில் புகுந்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி பிரிக்கும் வாக்குகள் காங்கிரசை பாதிக்குமா, அல்லது பாரதிய ஜனதாவை பாதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 24 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பை தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. இதேபோன்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் அறிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சி ஒருபடி மேலே சென்று காவல் துறையில் 40 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. அங்கு பிரசாரத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி, விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து பேசினார். மேலும் பெண்களுக்கு குறைந்த விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனால் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மீண்டும் அங்கு ஆட்சியை கைப்பற்றுவோம் என்று பா.ஜ.க. கூறி வருகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்து கொண்டிருக்கிறது. பாஜக பெரும்பான்மையை தாண்டி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தரகாண்ட்டில் பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை. காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது.