செல்லாத ரூபாய் அறிவிப்பு மூலம் , கடும் பணத்தட்டுப்பாடு இருக்கும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில் சாதாரண செல்போன் வைத்துள்ளவர்கள் கூட எளிதாக பணம்செலுத்தும் வகையில், புதிய யு.எஸ்.எஸ்.டி. அல்லது *99# என்ற அழைப்பு எண்ணை மத்திய அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று அறிமுகப்படுத்த உள்ளது.
யு,எஸ்.எஸ்.டி என்றால் என்ன?
யு.எஸ்.எஸ்.டி என்பது ஜி.எஸ்.எம். செல்போன்களில் உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். அதாவது அனைத்து வகையான செல்போன்களில் இருந்து, அப்ளிகேஷனுக்கு எழுத்து வடிவிலான செய்திகளை அனுப்பப் பயன்படும் ஒரு தொழில் நுட்பமாகும்.
6 மாநில முதல்வர் குழு
இந்த யு.எஸ்.எஸ்.டி. தொழில்நுட்பத்தை மிகவும் எளிமைப்படுத்தி, சாதாரண செல்போன்கள் மூலமும் பணம் அனுப்பவும், பணம் பெறவும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தியுள்ளது மத்தியஅரசு. இதை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியிட 6 மாநில முதல்வர்கள் குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் முறையை ஊக்கப்படுத்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 6 மாநில முதல்வர்கள் குழுவை மத்தியஅரசு அமைத்தது. அந்த குழு இரு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்கப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. அந்த குழுவின் செயலாக்கமாக இந்த மேம்படுத்தப்பட்ட யு.எஸ்.எஸ்.டி. எண் ‘*99# ’ அறிமுகமாகிறது.
சாதாரண செல்போன்
இது குறித்து நிதிஅயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், “ சாதாரண செல்போன் வைத்து இருப்பவர்களும், வங்கிக் கணக்கு வைத்து இருப்பவர்களும், கடைகளில் வாங்கிய பொருட்களுக்கு எளிதாக பணம் செலுத்தவும், ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கணக்குக்கு பணம் பரிமாற்றவும் செய்யவும், வங்கிக்கணக்கு இருப்பை அறியவும், உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற எளிய முறையை கண்டுபிடித்து இருக்கிறோம்.

புதியஎண்
இதற்காக ஏற்கனவே இருந்த யு.எஸ்.எஸ்.டி. தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, புதிதாக *99# என்ற எண்ணை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் இந்தியா, புதிய யு.எஸ்.எஸ்.டி எண் *99# ரிசர்வ் வங்கியின் யு.பி.ஐ. மையத்தில் இணைத்து இருக்கிறோம். இதன் மூலம் கணக்கு வைத்து இருப்போர் எளிதாக மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம், பெறலாம். இந்த யு.பி.ஐ. மையத்தில் தான் அனைத்து வங்கிகளும் தங்களது மெயின் சர்வரில் இணைத்திருக்கும்.
வேகமாகப் பரவும்
தற்போது நாட்டில் 40 கோடி செல்போன்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும்போது, டிஜிட்டல் பேமென்ட் என்பது அதிவேகமாக பரவும். குறிப்பாக ஸ்மார்ட்போன்மோகம் அதிகமாக இருக்கும் கிராமங்களில், இந்த தொழில்நுட்பம் அதிவேகமாகப் பரவும் என எதிர்பார்க்கிறோம். இந்த புதிய யு.எஸ்.எஸ்.டி. எண் *99# கிறிஸ்துமஸ் என்று அறிமுகமாகலாம்'' எனத் தெரிவித்தார்.

எப்படி பயன்படுத்துவது
இந்த *99# என்ற எண்ணை சாதாரண செல்போன் வைத்து இருப்பவர்களும் டையல் செய்தால் அதில், நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயரின் முதல் 4 இலக்கம் கேட்கும், அதன்பின், வங்கிக்கணக்கு எண், பணம் அனுப்ப வேண்டியவரின் வங்கிக்கணக்கு எண், தொகை ஆகியவற்றை நிரப்பி அனுப்பலாம்.
