அருணாச்சலப் பிரதேசம்: இந்தியாவை அங்கீகரித்த அமெரிக்க செனட் குழு!

அமெரிக்க செனட் குழு அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்துள்ளது

US Senate Committee Recognizes Arunachal As Integral Part Of India

பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்கப் பயணம் முடிந்து ஒரு மாதத்திற்குள், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து நாடாளுமன்ற செனட் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. செனட் குழுவினரான, ஜெஃப் மெர்க்லி, பில் ஹேகர்டி, டிம் கெய்ன் மற்றும் கிறிஸ் வான் ஹோலன் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர்.

சீனாவுக்கும், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கும் இடையிலான சர்வதேச எல்லையாக மெக்மஹோன் கோட்டை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்பதை இந்தத் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானது என கூறி பெருமளவிலான ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்கக் கொள்கைகளை அந்நாடு செய்து வந்த நிலையில், அதற்கு எதிராக இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

இந்த தீர்மானமானது முழு வாக்கெடுப்புக்கு அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய செனட் சபைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

“சுதந்திரத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் மதிப்புகள் மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, உலகெங்கிலும் உள்ள நமது நடவடிக்கைகள் மற்றும் உறவுகளுக்கு மையமாக இருக்க வேண்டும் - குறிப்பாக சீன அரசாங்கம் ஒரு மாற்று பார்வையை முன்வைக்கிறது.” என செனட் உறுப்பினர் மெர்க்லி கூறியுள்ளார். சீனா மீதான அமெரிக்க நாடாளுமன்ற நிர்வாக ஆணையத்தின் இணைத் தலைவராக அவர் பணியாற்றி வருகிறார்.

“இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள செனட் குழு, இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா கருதுகிறது என்பதை குறிக்கிறது. அது சீனாவுக்கு சொந்தமானது அல்ல. மேலும், அப்பகுதிக்கு அமெரிக்கா தனது ஆதரவையும் உதவியையும் அளிக்கும். இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே எண்ணம் கொண்ட சர்வதேச கூட்டாளிகள்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

26 ரஃபேல் போர் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

தொடர்ந்து பேசிய மெர்க்லி, “சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதிக்கு சீனா தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களை முன்வைத்து வரும் நேரத்தில், அமெரிக்கா தனது மூலோபாய பங்காளிகளுடன், குறிப்பாக இந்தியா மற்றும் பிற குவாட் நாடுகளுடன் தோளோடு தோள் நிற்பது முக்கியமானது. தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்கள், இமயமலை மற்றும் தெற்கு பசிபிக் பகுதிகளில் சீனா தனது பிராந்திய விரிவாக்கத்தில் இருந்து பின்வாங்க வேண்டும்.” என்றார்.

அதேபோல், “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் பகிரப்பட்ட எல்லையில் அதிகரித்து வருவதால், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கை ஆதரிப்பதன் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்கா வலுவாக நிற்க வேண்டும்.” என செனட் உறுப்பினர் கார்னின் கூறியுள்ளார்.

இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய குடியரசின் ஒரு பகுதியாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்பதை இந்தத் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தும் என்ற அவர், இதனை தாமதமின்றி நிறைவேற்றுமாறு செனட் சபை உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios