26 ரஃபேல் போர் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்!
பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று கூடுதல் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (Defence Acquisition Council) ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியாவும் பிரான்ஸும் இந்த இரண்டு மெகா கொள்முதல் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் தயாரிப்பான ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்குவது இந்திய கடற்படையின் உடனடி மற்றும் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்யும். ஏற்கனவே இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ள நிலையில், கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
அதேபோல், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மசகான் டாக்யார்ட்ஸ் லிமிடெட் (MDL) இல் கட்டப்பட்டு வரும் தற்போதைய கப்பல்களின் வரிசையில், இந்த மூன்று கூடுதல் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களும் இணையும். மசகான் டாக்யார்ட்ஸில் தற்போது கட்டப்பட்ட கப்பல்களின் வகைகளை விட ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் மேம்பட்டதாக இருக்கும். இதுவரை ஏற்கனவே 5 கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன. 6ஆவது கப்பல் அடுத்த ஆண்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்படையின் போர் விமான ஒப்பந்தத்திற்கு, போயிங்கின் F/A-18 E/F Super Hornet மற்றும் டசால்ட் ஏவியேஷனின் Rafale-M இடையே போட்டி நிலவியது. இரண்டு போர்களும் கடற்படையின் தேவைகளை பூர்த்தி செய்தாலும், ரஃபேல் எம் போர் விமானங்களானது, இந்திய விமானப்படையால் இயக்கப்படும் ரஃபேல் விமானங்களின் பொதுவான உதிரிபாகங்களையும் ஆதரவையும் பூர்த்தி செய்யும் என தெரிகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம்: மத்திய அரசு ஹேப்பி நியூஸ்!
இந்த சூழலில், பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா கடந்த 40 ஆண்டுகளாக பிரெஞ்சு போர் விமானங்களை நம்பியிருக்கிறது. 2015 இல் ரஃபேல் வாங்குவதற்கு முன்பே, 1980களில் மிராஜ் ஜெட் விமானங்களை இந்தியா வாங்கியது. அதில், இன்னும் இரண்டு விமானப்படையில் உள்ளன.
விலை மற்றும் பிற கொள்முதல் விதிமுறைகள் தொடர்பாக பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதேபோன்ற விமானங்களை மற்ற நாடுகள் கொள்முதல் செய்யும் விலைகளுடன் ஒப்பிடுவது உட்பட அனைத்து தொடர்புடைய அம்சங்களும் கணக்கில் கொள்ளப்படும்.” என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விமான ஒப்பந்தத்தின் மொத்த செலவு ரூ.50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், 2005 ஆம் ஆண்டில், பிரான்சிடம் இருந்து ஆறு ஸ்கார்பீன் வகை டீசல் நீர்மூழ்கிக் கப்பல்களை ரூ.18,800 கோடிக்கு இந்தியா வாங்கியது. அதில் கடைசி கப்பல் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அதிக உள்நாட்டு உள்ளடக்கம் கொண்ட கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது, கடற்படையின் செயல்பாட்டுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உள்நாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.” எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் மசகான் டாக்யார்ட்ஸின் திறன் மற்றும் நிபுணத்துவத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.