பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு: தயாராகும் அமெரிக்கா!
பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகிற 21ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, ஜூன் 22ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கவுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறவுள்ளதால், அவரது பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவதுடன், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்திக்கிறார். பல்வேறு துறைகளில் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும், இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அந்நாட்டு அரசியல்வாதிகள், குடிமக்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். பிரதமர் மோடியின் வருகைக்காக அமெரிக்க அரசியல்வாதிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதன் முக்கியத்துவம் என்ன? அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதிகள் கருத்து
மோடியின் அமெரிக்கப் பயணம் மிகவும் முக்கியமானது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் அமி பெரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய-அமெரிக்க உறவுகள் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன. ஆசியாவில் புவிசார் அரசியல் சவால்கள் உள்ளன. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக திகழ்கிறது. எனவே இந்தியாவுடனான வணிக உறவை விரிவுபடுத்துவதற்கு இதனை ஒரு வாய்ப்பாக நான் கருதுகிறேன். சங்கிலி பற்றி நாங்கள் அதிகம் பேசுகிறோம். கொரோனா பாதிப்பில் இருந்து வெளியே வந்துள்ளோம். எனவே, இரு நாடுகளும் இணைந்து முன்னேற இது ஒரு உண்மையான தருணமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.” என்றார்.
அமெரிக்கா - இந்தியா இடையேயான பாதுகாப்புத் துறையில் கூட்டாண்மை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமி பெரா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசுவார் என்று கூறினார். “பிரதமர் மோடியின் பயணத்தின் போது சில உறுதியான விஷயங்கள் வெளிவர வேண்டும். பாதுகாப்புத் துறையும் அவற்றில் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஹெலிகாப்டர்களாக இருந்தாலும் சரி, கடல்சார் கூட்டாண்மையாக இருந்தாலும் சரி, இரு நாடுகளும் இணைந்து நீண்டகாலமாக செயல்படுகின்றன.” என அமி பெரா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “விநியோக சங்கிலி விஷயத்திலும் சில உடன்பாடுகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். சீனாவை அதிகமாகச் சார்ந்திருப்பதன் பாதிப்பை கொரோனா தொற்றுநோய்கள் எடுத்துக்காட்டி விட்டன. அமெரிக்க முதலீடுகள் ஈர்ப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக நான் நினைக்கிறேன்.” என்றார்.
அமெரிக்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறோம் என்று ஓஹியோ செனட்டர் ஷெராட் பிரவுன் தெரிவித்துள்ளார். “ஓஹியோவில் வலுவான இந்திய-அமெரிக்க சமூகம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார். அலபாமாவின் பிரதிநிதி ஜெர்மி கிரே கூறுகையில், “இந்தியாவுடனான எங்கள் கூட்டாண்மை பகிரப்பட்ட மதிப்புகளையும் ஒத்துழைப்பின் சக்தியையும் பிரதிபலிக்கிறது.” என்றார்.
எம்ஐடியின் பேராசிரியர் பவன் சின்ஹா கூறுகையில், “அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க விரும்புகிறார்கள். இந்தியாவும் அமெரிக்காவும் சக்தி வாய்ந்த அணி. பிரதமரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். இதன் மூலம், அமெரிக்க காங்கிரஸில் அதிக முறை உரையாற்றிய உலகின் மூன்றாவது தலைவர் என்ற பெருமையை அவர் பெறுவார் என பேராசிரியர் பனகாரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் செல்வாக்கு குறித்து உலகமே பெருமை கொள்கிறது என்று பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா தெரிவித்துள்ளார். யோகா முதல் உணவு வரை, தொழில்நுட்பம் முதல் கல்வி வரை, அறிவியலில் இருந்து கலை மற்றும் பொழுதுபோக்கு மற்றும் அதற்கு அப்பாலும் உலகளவில் இந்தியா தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரதமர் மோடியின் பயணம் குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.