இலங்கை அதானி துறைமுகத்துக்கு நிதியுதவி அளிக்கும் அமெரிக்கா!
இலங்கையில் அதானி கட்டிவரும் துறைமுகத்துக்கு அமெரிக்கா நிதியுதவி அளிக்கவுள்ளது
தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சித்து வருவதற்கிடையே, இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியக் கோடீஸ்வரர் கவுதம் அதானி கட்டி வரும் துறைமுக முனையத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம், 553 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்கு முன்பு, சீன துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களில் பெருமளவு கடன் வாங்கியதால், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் முயற்சிகளின் ஒருபகுதியாக சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனத்தின் இந்த நிதியுதவி பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு பல பில்லியன்கள் குறைந்த நிலையில், அமெரிக்காவின் நிதியுதவி அக்குழுமத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்கக்கூடும்.
“கொழும்புவில் உள்ள ஆழ்கடல் மேற்கு கன்டெய்னர் டெர்மினல் (deepwater West Container Terminal), ஆசியாவிலேயே அமெரிக்க அரசு நிறுவனத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு முதலீடு ஆகும். இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கிய கூட்டாளியான இந்தியா உட்பட அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கு ஊக்கமளிக்கும்.” என அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரிப்பு: இளைஞர்களை பாராட்டிய பிரதமர் மோடி!
2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனத்தின் மொத்த உலகளாவிய முதலீடான 9.3 பில்லியன் டாலரில் அதானி துறைமுகமும் அடங்கும். இலங்கை துறைமுக நிதியுதவியை இந்தோ-பசிபிக் முழுவதும் வளர்ச்சித் திட்டங்களில் அதிகமாக ஈடுபடுவதற்கான அமெரிக்காவினுடைய உறுதிப்பாட்டின் அடையாளம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளரான சீனா, கடந்த ஆண்டு இறுதி வரையில் சுமார் 2.2 பில்லியன் டாலர் இலங்கையில் முதலீடு செய்துள்ளது. மேலும், இலங்கையின் அதிகம் பயன்படுத்தப்படாத தெற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் நீடித்து நிலைக்க முடியாதது என்றும் அது சீனாவின் கடன்-பொறி இராஜதந்திரம் என்றும் அமெரிக்க வெளிப்படையாக விமர்சிக்கிறது.
சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகாமையில் இருப்பதால், கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் மிகவும் பரபரப்பான ஒன்றாக இயங்கி வருகிறது. அனைத்து கண்டெயினர் கப்பல்களிலும் கிட்டத்தட்ட பாதி அது வழியாக செல்கிறது. இந்த துறைமுகம், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் 90 சதவீதத்துக்கும் அதிகமான பயன்பாட்டில் இயங்கி வருவதாகவும், எனவே, அதற்கு புதிய திறன் தேவை என்றும் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.