அவரச தேவைக்காக 100 விமானங்கள் இந்திய விமானப் படைக்கு தேவை என இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ். கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார்.


புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய விமானப் படை மூலம் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடி தரும்விதமாக பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து. பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப் படையினர் விரட்டியடித்தனர். அந்தத் துரத்தலில் இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதிலிருந்து ‘எஜெக்ட்’ செய்து தப்பிக்க விங் கமாண்டர் அபிநந்தன் முயற்சித்தபோது, அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார்.
அபிநந்தன் நாடு திரும்பிவிட்ட நிலையில், அவர் பயன்படுத்திய பழைய மிக் ரக விமானம் குறித்து விமர்சனமும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரம் அரசைக் குறை கூறிவருகிறார்கள். இந்நிலையில் இந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.கிருஷ்ணசாமி, அவரசத் தேவைக்காக 100 விமானங்களை வாங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
 “உலகின் அதிவிரைவு போர் விமானம் எப் - 16. அந்த விமானத்தை  சுட்டு வீழ்த்திய முதல் வீரர் அபிநந்தன். ரஷ்யாவின் பழைய போர் விமானங்களில் ஒன்றான மிக் - 21ல் பறந்துசென்று, இந்த அரிய சாதனையை அபிநந்தன் நிகழ்த்தி உள்ளார். எப் - 16 விமானம், இரு இருக்கைகளுடன் இருக்கும். அபிநந்தன் சுட்டு வீழ்த்திய விமானத்தில் இருந்த விமானி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றான.
அபிநந்தன் சென்ற, ‘மிக் - 21 பைசன்’ ரகப் போர் விமானம், நவீனமானதுதான். ஆனாலும் எப் -16-க்கு இணையாது என நிச்சயம் கூற முடியாது. இந்தியாவிடம் போதிய எண்ணிக்கையில் தாக்குதல் போர் விமானங்கள் இல்லாதது குறித்து அரசிடம் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவையாக 100 விமானங்களாவது இந்தியாவுக்கு தேவை. இவற்றை வாங்குவதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இவ்வாறு எஸ்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.