இந்திய நாட்டின் 68வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தேசிய கொடியேற்றினார். பின்னர் ராணுவ பலத்தை பறைசாற்றும் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பீரங்கிகள்,தளவாடங்கள், ஏவுகணைகள் அணிவகுத்து பேரணியாக சென்றன. இந்த நிகழ்ச்சியில் 179 ஐக்கிய அரபு அமீரக ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, முப்படை தளபதிகளுடன், மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

இதைதொடர்ந்து, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு, அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை, ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவின் மனைவியிடம், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இந்தியாவின் 68வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபிதாபி பட்டத்து இளவரர் முகமத் பின் சையது மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.