UP people supports yogi adityanath

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திட்டங்களுக்கும், அதிரடி நடவடிக்கைகளுக்கும் அந்த மாநில மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத இறைச்சி வெட்டும் கூடம் மூடுதல், ‘ஆன்ட்டி ரோமியோ படை’ உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

புதிய முதல்வர்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு பின் பாரதிய ஜனதாகட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் தொகுதி எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து அதிரடியாக அறிவிக்கும் திட்டங்கள் , நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

கள ஆய்வு

இது குறித்து ‘காவோன் கனெக்‌ஷன்’ என்ற தனியார் தொண்டு நிறுவன அமைப்பு மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. மாநிலத்தின் பின்தங்கிய பகுதியான பன்டேல்கண்ட் பகுதியின் தென்மேற்கில் உள்ள சோன்பத்ரா பகுதியில் இருந்து மீரட் வரை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர்.

ஆதரவு

இந்த கருத்துக்கணிப்பில், புதிதாக முதல்வராக பொறுப்பு ஏற்ற யோகி ஆதித்யநாத்தின்நடவடிக்கைகள் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.

ஆன்ட்டிரோமியோ

குறிப்பாக சட்டவிரோத இறைச்சிக்கூடங்களை மூடுதல், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்ஆன்ட்டி ரோமியோ படை, வி.ஐ.பி. கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு, அரசு அதிகாரிகள் பணியின் போது பான்மசாலா, குட்கா மெல்ல தடை போன்ற நடவடிக்கைகள் மக்களிடையே மதிப்பைப் பெற்றுள்ளது.

38 சதவீதம்

சட்டவிரோர இறைச்சிக் கூடங்களை மூடியதற்கு 38.1 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர், ஆன்ட்டி-ரோமியோ படைக்கு 25.4 சதவீத மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக பெண்கள்ஆன்ட்டி ரோமியோ படைக்கு 37சதவீதம் வரவேற்பு அளித்துள்ளனர்.

பாதிப்பு

அதேசமயம், சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடியதால், மாநிலத்தின் முக்கிய தொழிலான இறைச்சி ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சரியான பாதை

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் 62 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். சரியான பாதையில் மாநிலத்தை நடத்துகிறார்கள், சிறப்பாகச் செயல்படுகிறார் முதல்வர் ஆதித்யநாத் என 71 சதவீத மக்கள் கூறுகின்றனர்.