2000 ரூபாயால் வந்த வினை... விபரீதத்தில் முடிந்த பந்தயம்... நண்பரின் பேச்சை கேட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்... 

பரோட்டா சூரியைப் போல விவகாரமான பந்தயம் ஒன்றில் பங்கேற்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ். இவர் நேற்று தனது நண்பருடன் பிபிகஞ்ச் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சுபாஷின் நண்பர் அவரைப் பார்த்து, "உன்னால 50 முட்டை சாப்பிட முடியுமா" என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சுபாஷ் "ஏன் முடியாது, என்னால முடியும்" என மார் தட்டியுள்ளார். அப்படின்னா சரி, "நீ ஜெயிச்சா 2000 ரூபாய் தர்றேன்" என நண்பர் கூறியதால் பச்சை முட்டை சாப்பிடுவதற்காக களத்தில் இறங்கினார் சுபாஷ்.

நண்பர் ஒவ்வொரு முட்டையாக உடைத்து, உடைத்து சுபாஷ் வாயில் ஊற்ற, எப்படியாவது பெட்டில் ஜெயிக்க வேண்டுமென அவசர, அவசரமாக அதனை உள்ளே தள்ளியுள்ளார். வேகமாக முட்டைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த சுபாஷ், 42வது முட்டையை உடைத்து வாயில் ஊற்றும் போது நிலைதடுமாறி பொத்தேன்று கீழே விழுந்துள்ளார். நண்பரும், அருகில் இருந்தவர்களும் சுயநினைவை இழந்த சுபாஷை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். அங்கு போதுமான வசதி இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல கூறியுள்ளனர். இதனையடுத்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுபாஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் அதிகப்படியாக சாப்பிட்டதால் தான் சுபாஷ் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர். 

விபரீதம் தெரியாமல், விளையாட்டாக ஆரம்பித்த பந்தயம் ஒருவரது உயிரையே காவு வாங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.