உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில், மதுபோதையில் இருந்த தந்தை ஒருவர் தனது ஓராண்டு மகனைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள சுரேமன் நகர் கிராமத்தில், மதுபோதையில் இருந்தவர், தனது ஓராண்டு மகனைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பைரியா பகுதியில் உள்ள சுரேமன் கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் அளித்துள்ள தகவலின்படி, ரூபேஷ் திவாரி என்ற நபர், தனது ஒரு வயது மகன் கினுவைத் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தது. படுகாயமடைந்த குழந்தை கினு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது.

குடிபோதையில் அட்டூழியம்

ரூபேஷ் திவாரி ஒரு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் அடிக்கடி தனது மனைவி ரீனா திவாரியை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை மாலை ரூபேஷ் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளார். அவர் தனது தந்தை கமலேஷ் திவாரியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரைக் கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார்.

கணவர் போதையில் ரகளை செய்வதைப் பார்த்து பயந்த மனைவி ரீனா, தனது ஒரு வயது மகனையும் மூன்று வயது மகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, தனது மாமனாரை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீடு திரும்பிய ரீனாவுக்கு அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை அன்று ரீனா மற்றும் அவரது மாமனார் வீட்டிற்குத் திரும்பியபோது, ரூபேஷ் திவாரி கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அவர்களது மகனைக் குத்திக் கொன்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் தாடை கிழிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ரீனா அளித்த புகாரின் அடிப்படையில், ரூபேஷ் திவாரி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட ரூபேஷ் திவாரியை கைது செய்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.