உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்தது டெல்லி மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உன்னாவ் என்ற இடத்தில் இளம்பெண் ஒருவர் 2017-ம் ஆண்டு பாங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் தன்னை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பான புகாரை ஏற்க மறுத்ததால் யோகி ஆதித்யநாத் வீடு முன்னதாக தீ குளிக்க முயன்றார். இதனையடுத்து 2018-ம் ஆண்டு ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது. இதன்பின் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, போலீஸ் காவலுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் தந்தை மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. மேலும், வழக்கு விசாரணைக்காக ஜூலை மாதம் சிறுமியும், அவரது வழக்கறிஞரும் நீதிமன்றத்திற்கு சென்றபோது, அவர்கள் சென்ற வாகனம், எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு, படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதினார். பின்னர், அந்தப் பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த பாலியல் பலாத்கார வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகளை டெல்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 

இதனையடுத்து, பலாத்கார வழக்கில் எம்எல்ஏ குல்தீப்சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரம் பிறகு வெளியிடப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில், இன்று குல்தீப்சிங் சென்காருக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, குல்தீப் சென்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதுடன், ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையில் இருந்து ரூ.10 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.